தமிழ்த் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் பார்த்திபன்.
வித்தியாசமான படைப்புகளுக்குப் பெயர் பெற்ற இவரது முதிர்ச்சியான நடிப்பு நல்ல நடிகராக இவரைத் தமிழ்த் திரையுலகிற்கு அடையாளப்படுத்தியது.
தாம் நடித்த பல படங்களில் தம்மைக் காட்டிலும் சிறப்பான நடிப்பை மற்றவர்களால் நடிக்க முடியாது எனக் கூறும் அளவிற்கு இவரது நடிப்பு அமைந்திருக்கும்.
குறிப்பாக, அழகி, ஆயிரத்தில் ஒருவன், மாவீரன் கிட்டு, வெற்றிக் கொடி கட்டு போன்ற படங்களைச் சொல்லலாம்.
திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிவந்த இவர், 1990ஆம் ஆண்டு நடிகை சீதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பதினொரு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த அவர்கள் 2001ஆம் ஆண்டு மணமுறிவு பெற்று பிரிந்தனர். சீதா மறுமணம் செய்துகொண்ட போதிலும் பார்த்திபன் அதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதிகாத்து வந்தார். இது பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், தமது அமைதியைக் கலைத்து அண்மையில் நடந்த நேர்காணலில் மறுமணம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ளார் பார்த்திபன்.
அவர் அளித்த பதில் பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“சீதாவுக்குப் பிறகு யாரையும் என் மனைவியாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரைப் பிரிந்தபின் அவரது தாயார் மறைவின்போதுதான் அவரைக் கடைசியாகச் சந்தித்தேன். இந்த வேகமான உலகில் உறவுகள் நிலையற்றதாக இருக்கின்றன.
“அதனுடன் பயணிக்காமல் அதற்குப் பதிலாக நினைவுகளுடன் பயணிக்கத் தொடங்கிவிட்டேன். இதுவும் ஒருவிதமான காதலின் வடிவம்தான்,” என்றார் அவர்.


