இசைமீதான ஒரு அலாதி மோகம்தான் பரதநாட்டியம், பாலே நடனமெல்லாம் என்னை கற்றுக்கொள்ள வைத்தது. அந்த இசை ஆர்வம்தான் திரைப்படத் துறையில் எனது நடிப்புத் திறனை வளர்த்துக்கொள்ளவும் பெரும் ஊக்கமளித்து வருகிறது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ருக்மினி வசந்த்.
மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் காதலை மையமாகக் கொண்ட படத்தில் கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை ருக்மினி வசந்த் நடிப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘ஏஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ருக்மினி வசந்த். அடுத்து, சிவகார்த்திகேயனுடன் அண்மையில் வெளிவந்த ‘மதராஸி’ படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து, மணி ரத்னம் இயக்கும் பெயரிடப்படாத படம் என தமிழில் அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார்.
இந்தச் சூழலில் ருக்மினி வசந்த்தின் நடிப்பில் ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கனகவதி எனும் பாத்திரத்தில் ருக்மினி வசந்த் நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், தற்போது தன்னுடைய காட்சிகளுக்கான ‘டப்பிங்’ பணிகளை முடித்துவிட்டதாக நடிகை ருக்மினி வசந்த் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
என்னுடைய 15 வயதிலேயே திரைத்துறை மீதான எனது ஈடுபாடு துளிர்விட ஆரம்பித்து விட்டது. ஒரு நாள் அம்மாவிடம், “நான் என் வாழ்க்கையை எனது மனம்போல் வாழ ஆசைப்படுகிறேன். என்னை ஏதாவது ஒரு நடிப்புப் பள்ளியில் சேர்த்துவிடுங்கள்,” என்று கேட்டேன்.
அம்மாவும் எனது விருப்பத்துக்குத் தடை போடாமல் சம்மதித்தார். ஏற்கெனவே ஒருபுறம் படிப்பையும் மறுபுறம் பாலே நடனம், பரதநாட்டியம் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தேன்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து லண்டன் RADA மியூசிக்கல் ஆக்டிங் வகுப்பில் சேர்ந்து நடிப்பை முறைப்படி கற்றுக்கொண்டேன். நடிப்புத் துறை சார்ந்த பட்டப் படிப்பையும் முடித்துள்ளேன். அதன்பிறகு திரைத்துறையில் பயணப்படத் தொடங்கினேன் எனச் சொல்கிறார் ருக்மினி.
அப்பா, மறைந்த ராணுவ வீரர் கர்னல் வசந்த் வேணுகோபால். கர்நாடகாவின் முதல் அசோக சக்ரா வாங்கிய ராணுவ அதிகாரி.
அம்மா சுபாஷினி வசந்த் பரதநாட்டிய டான்சர். அப்பாவின் வாழ்க்கை வரலாறை எழுதி புத்தகமாக வெளியிட்ட எழுத்தாளர். ராணுவத்தில் கணவர்களை இழந்த மனைவிகளுக்கான தன்னார்வலர் அமைப்பை ஆரம்பித்து ஆதரவு கொடுத்து வருகிறார்.
இந்தப் பெற்றோரின் பெண் பிள்ளைதான் நான் என எங்கே சென்றாலும் சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமையாக உள்ளது என்கிறார் ருக்மிணி.
பொதுவாக, கதையில் எனக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனித்துதான் நான் நடிக்க விரும்பும் கதைகளைத் தேர்வு செய்கிறேன்.
ஆனால், எனது திரை வாழ்க்கையில் எனக்கு அமைந்த அத்தனை படமும் எனக்கான முக்கியத்துவத்தை நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே கொடுத்த படங்களாகத்தான் அமைந்துள்ளன என்று ருக்மினி வசந்த் மெச்சிக் கொள்கிறார்.
‘மதராஸி’ திரைப்படக் கதை முழுவதும் என்னைச் சுற்றித்தான் நடக்கும். அதிலும் முருகதாஸ் மாதிரியான பெரிய இயக்குநருடன் பணிபுரியும் கொடுப்பினை அவ்வளவு எளிதாக யாருக்கு கிடைக்கும் என்றும் அவர் கேள்வி கேட்கிறார்.
நான் ஒரு புத்தகப் பிரியை. நிறைய புத்தகங்கள் படிப்பேன். குறிப்பாக வெவ்வேறு மொழிகளில் புத்தகங்களை தேடிப் படிப்பதற்குப் பிடிக்கும். அதிலும் மற்றொரு மொழியின் கலாசார அடிப்படையிலான வரலாற்றுப் புத்தகங்களை அதிகம் படிப்பதுண்டு. வில்லியம் டால்ரிம்பிலின் புத்தகங்கள் மிகவும் பிடிக்கும்.
2007ஆம் ஆண்டு அப்பா தவறிவிட்டார். அப்போது எனக்கு 10 வயது. அதன்பிறகு அம்மாதான் எனக்கு எல்லாமே. அப்பாவுக்கான அசோக சக்ரா விருதை வாங்க நானும் அம்மா, தங்கையும் போயிருந்தோம். அந்த தருணம்தான் என் வாழ்க்கையில் எந்த அளவுக்குப் பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்த்தியது என நினைவு கூர்ந்துள்ளார் ருக்மினி வசந்த்.

