தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரையுலகில் சாதிக்க பொறுமை தேவை: சுவாசிகா

2 mins read
8578e31d-0ca2-495a-8927-df57694e8a5e
சுவாசிகா. - படம்: ஊடகம்

‘லப்பர் பந்து’ வெற்றிப் படத்தை அடுத்து, ‘மாமன்’, ‘கறுப்பு’, ‘போகி’ என தமிழில் அடுத்தடுத்து படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகிறார் சுவாசிகா.

இந்த திடீர் வெற்றியும் புகழும் தன்னை எந்த வகையிலும் மாற்றிவிடாது என்றும் வெற்றியின்போது அடக்கமாக இருக்க வேண்டும் என்பது திரையுலகில் தாம் கற்றுக்கொண்ட பாடம் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். இனி சுவாசிகா பேசுவதைக் கேட்போம்.

“நல்ல வேளையாக, நான் செய்த புண்ணியமோ என்னவோ, ‘லப்பர் பந்து’ படத்துக்குப் பிறகு ஒரே மாதிரியான வேடங்கள் என்னைத் தேடி வரவில்லை.

“ஒருவேளை அம்மா வேடத்திலேயே நடிக்க அழைத்திருந்தால் ஒப்புக்கொண்டிருக்க மாட்டேன். ‘மாமன்’ படத்தில் அக்காவாக ‘பதவி உயர்வு’ கிடைத்தது. அதுவே நல்ல விஷயம்தான்.

“அடுத்து, சூர்யாவுடன் ‘கறுப்பு’ படத்தில் நடிக்கிறேன். ஆனால், கிராமத்துக் கதாபாத்திரத்தில் அல்ல. முற்றிலும் வித்தியாசமான ஒரு வேடம் அமைந்துள்ளது. என்னால் ‘மாடர்ன்’, கிராமத்துப் பெண் எனப் பல கோணத்தில் நடிக்க முடியும். இந்த நம்பிக்கையுடன்தான் இயக்குநர்கள் என்னிடம் கதை சொல்கிறார்கள்.

“எல்லா நடிகைகளுக்குமே பெரிய கதாநாயகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனக்கும் அந்த ஆசை உண்டு. சூர்யாவின் மற்ற படங்களைப் போலவே, ‘கறுப்பு’ படமும் பெரிய ‘பட்ஜெட்’டில் உருவாகிறது. படம் முழுவதும் வரக்கூடிய முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, ரசிகர்களை மகிழ்விக்கும் அத்தனை அம்சங்களையும் படத்தில் வைத்துள்ளார்.

“பல பேட்டிகளில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளேன். ‘கோரிப்பாளையம்’ படம் வெளியானபோது, பாலாவைச் சந்தித்து அவரது படத்துக்கான நடிப்புத் தேர்வில் பங்கேற்பேன். அப்போது மிகவும் ஒல்லியாக இருந்ததால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்தப் படம் ‘பரதேசி’. தன்ஷிகா நடித்த வேடத்துக்குத்தான் நான் முயற்சி செய்தேன்.

“பாலா படங்களில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல், எல்லா கதாபாத்திரத்துக்கும் தனித்துவம் இருக்கும். நம் நடிப்பை வெறித்தனமாக வெளிப்படுத்தும் வாய்ப்பும் கிட்டும்.

“அண்மைக் காலமாக எதிர்மறை, நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ஆசையும் வந்திருக்கிறது. பாலா போன்ற ஆளுமைகளின் படங்களில் நடிக்கும்போது அந்த மாதிரியான கதாபாத்திரங்கள் பேசப்படும் என நம்புகிறேன்.

“கடந்த 15 ஆண்டுகளாகத் திரையுலகில் வெற்றி, தோல்வி என இரண்டையும் பார்த்தாகிவிட்டது. திரையுலகுக்கு வந்துவிட்டால் பொறுமை தேவை என்பது அடிப்படை பாடங்களில் ஒன்று. எனவே, வெற்றிக்காகப் பொறுமையாக இருக்கப் பழகிக்கொண்டேன். எனக்கு வெற்றி சற்று தாமதமாகக் கிடைத்துள்ளது, அவ்வளவுதான்.

“சினிமாதான் என் தொழில். நடிப்பு எனக்குப் பிடித்தமான விஷயம். அதனால் என் நம்பிக்கையை விட்டுக்கொடுக்காமல், ஏதோ ஒரு நல்ல நாளில் நல்லது நடக்கும் எனக் காத்திருந்தேன். அது வீண் போகவில்லை.

“மலையாளத்தில் சின்னச் சின்னக் கதாபாத்திரங்கள், குணச்சித்திர வேடங்கள், பிறகு கதாநாயகி என்று எனது நிலை படிப்படியாகத்தான் உயர்ந்தது. சில மோசமான அனுபவங்களை எதிர்கொண்டாலும், சினிமா வேண்டாம் என்ற முடிவுக்கு மட்டும் வந்ததே இல்லை.

“என்ன நடந்தாலும், இதுதான் எனது துறை என்பதில் தெளிவாக இருந்தேன்,” என்று பேட்டியில் கூறியுள்ளார் சுவாசிகா.

குறிப்புச் சொற்கள்