தென்னிந்திய திரையுலகில் ஆணாதிக்கப் போக்கு நிலவுகிறது: தமன்னா

தென்னிந்திய திரையுலகில் ஆணாதிக்கப் போக்கு நிலவுகிறது: தமன்னா

2 mins read
d3a33aec-d34e-4cc3-b1a7-d974b70d7deb
தமன்னா. - படம்: பின்டர்ரஸ்ட்

திரைத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை தமன்னா, தென்னிந்திய திரையுலகம் குறித்தும் அங்கு கதாநாயகிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் ‘ஃபோர்ப்ஸ் இந்தியா’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

இது தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தான் நடனமாடிய பாடல்கள் குறித்து தமன்னா பேசுகையில், “நான் நடனமாடிய பாடல்களை வெறும் ‘ஐட்டம் சாங்ஸ்’ என்று கருதாமல், ‘பார்ட்டி சாங்ஸ்’ என்றே பார்க்கிறேன்.

“கரீனா கபூர், கத்ரீனா கைப் போன்றோரின் பிரபலமான பாடல்களைப் போல, சில திரைப்படங்களைவிட இத்தகைய பாடல்களே மக்களிடம் நீண்ட காலம் நிலைத்து நிற்கின்றன.

“கவர்ச்சி என்பது கேமராவிற்காக மட்டும் செய்வதல்ல; அது என் இயல்பான ஆளுமையின் ஒரு பகுதி.

“ஸ்த்ரீ 2’ படத்தின் ‘ஆஜ் கி ராத்’ போன்ற பாடல்களில் அந்தந்த கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி, ரசித்தே நடனமாடினேன்,” என்றார்.

பாலிவுட்-தென்னிந்திய சினிமா

இந்தி மற்றும் தென்னிந்திய திரையுலகிற்கு இடையே உள்ள வித்தியாசம் குறித்துப் பேசிய அவர், “இந்தித் திரையுலகில் நடிகர்கள் தங்களுக்குப் பிடித்தமான பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உள்ளது.

“கலைநயமிக்க கதைகளைத் தேர்ந்தெடுப்பவர்கள் வணிக ரீதியான கவர்ச்சிப் பாடல்களில் நடிப்பதில்லை. ஆனால், கலை, வணிக ரீதியான படங்களைச் சமமாகக் கையாள்பவர்களே அங்கு தவிர்க்க முடியாத ‘சூப்பர் ஸ்டார்களாக’ மாறுகிறார்கள்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“அதேவேளையில், தென்னிந்தியத் திரையுலகம் பெண்களைப் பார்க்கும் விதம் எப்போதும் பெண்களுக்குச் சாதகமாகவோ அல்லது கண்ணியமாகவோ இருப்பதில்லை.

“நான் தென்னிந்திய திரையுலகிற்குள் நுழைந்த ஆரம்பக் காலத்திலேயே அதை உணர்ந்தேன். அது ஒரு குறிப்பிட்ட விதமான பார்வை. அதில் ஓர் ஆணாதிக்கப் போக்கு நிலவும்; குறிப்பாகப் பாடல்களில் அதை நான் அதிகம் உணர்ந்திருக்கிறேன்,” என்று தமன்னா வெளிப்படையாகத் சாடியுள்ளார்.

நடிகைகளின் போராட்டம்

வணிக ரீதியிலான வெற்றியை மட்டுமே முதன்மையாகக் கொண்ட தென்னிந்திய சினிமா, அதிகக் கட்டுப்பாடுகள் நிறைந்தது என்று குறிப்பிட்ட தமன்னா, “இங்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை நீண்ட திரைப்பயணத்தைக் கொண்டுள்ள நடிகைகள் பெரிய சவால்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் ஒருபுறம் நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் திறமையை நிரூபிக்க வேண்டியுள்ளது.

“அதே வேளையில், வணிக ரீதியான பாடல், நடனக் காட்சிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. இந்த இரண்டையும் சமநிலையில் கையாண்டு சாதிக்க ஒரு நடிகைக்குத் தனித்துவமான நட்சத்திர அந்தஸ்து தேவைப்படுகிறது,” என்றார்.

அண்மையில் ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான ‘பெத்தி’ திரைப்படத்தில், ஜான்வி கபூர் மிகைப்படுத்தப்பட்ட கவர்ச்சியான தோற்றத்தில் சித்திரிக்கப்பட்டதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து, படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் திருத்தப்பட்டதோடு, இயக்குநர் புச்சி பாபு சனா பகிரங்கமாக மன்னிப்பும் கோரினார்.

இச்சம்பவம் நடந்த சில நாள்களிலேயே, தென்னிந்தியச் சினிமாவில் நிலவும் ஆணாதிக்கப் போக்கு குறித்து தமன்னா இத்தகைய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளது கோலிவுட், டோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்