மருத்துவப் படிப்பை முடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான ‘நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா’ மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து ‘மாயாநதி’, ‘வரத்தன்’ உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தமிழில் ‘ஆக்ஷன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’, ‘தக் லைஃப்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
புதிய படைப்புகளில் கவனம்
தற்போது நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அர்ஜுன் தாஸ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கியுள்ள ‘லவ்’ என்ற நெட்ஃபிலிக்ஸ் தொடரில் நடித்துள்ளார். மேலும், மலையாளத் திரைப்படமான ‘ஆஷா’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இதற்கிடையே, சமூக ஊடகங்களிலிருந்து விலகிய தனது முடிவு குறித்தும், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் அவர் மனம் திறந்துள்ளார்.
சமூக ஊடகங்களிலிருந்து விலகியதால் நிம்மதி
கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமூக ஊடகங்களிலிருந்து விலகிய ஐஸ்வர்யா லட்சுமி, ஓராண்டுக்கும் மேலாக அந்த முடிவில் உறுதியாக இருந்துவருகிறார். அண்மைய நேர்காணல் ஒன்றில் இதுகுறித்துப் பேசிய அவர், சமூக ஊடகங்களிலிருந்து விலகிய பிறகு முன்பைவிட அதிக மன அமைதியுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், சமூக ஊடகங்களில் நிலவும் தேவையற்ற விமர்சனங்கள், பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் மனநிலை ஆகியவற்றிலிருந்து விலகியிருப்பது தனக்கு நிம்மதியை அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் முன்பு இருந்தபோது ஏற்பட்ட பாதிப்புகள் இப்போது ஓரளவு இருந்தாலும் அவற்றைத் தொடர்ந்து பார்த்து மனதளவில் பாதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்கள் புதிய படைப்பாளிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும் திரைத்துறையில் வாய்ப்புகளைப் பெறவும் உதவுகின்றன என்பதை ஏற்றுக்கொண்ட ஐஸ்வர்யா லட்சுமி, தனிப்பட்ட முறையில் அவற்றிலிருந்து விலகியிருப்பதே தனக்கு மகிழ்ச்சியையும் மன அமைதியையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
‘கட்டா குஸ்தி’ படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஐஸ்வர்யா லட்சுமி, சூரி நடிப்பில் வெளியான ‘மாமன்’ படத்திலும் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
நட்சத்திரப் பட்டாளம் இடம்பெற்றுள்ள ‘பொன்னியின் செல்வன்’, ‘பொன்னியின் செல்வன் 2’ படங்களில் பூங்குழலி எனும் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இரண்டு ‘கட்டா குஸ்தி’ படங்களிலும் நகைச்சுவை வேடத்தில் நடித்த ஐஸ்வர்யா லெட்சுமி, தனுஷ் கதாநாயகனாக நடித்த ‘ஜகமே தந்திரம்’ படத்தில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக சோகமான கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார்.
