தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான் யார் என்பது மக்களுக்குத் தெரியும்: சர்ச்சைகளுக்கு கேபிஒய் பாலா பதில்

1 mins read
21d6b23b-b68c-414e-b2a5-553c0d72794f
நடிகர் கேபிஒய் பாலா. - படம்: இந்திய ஊடகம்

நான் யார் என்பது மக்களுக்குத் தெரியும் என்று நடிகர் ‘கலக்கப் போவது யாரு’ புகழ் பாலா தெரிவித்துள்ளார்.

இத்தனை நாள்களாக நடிகர் பாலா செய்த உதவிகள் அனைத்துமே போலியானது என்று அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாகப் பல்வேறு காணொளிகள் இணையத்தில் வலம் வந்தன. இதனைத் தொடர்ந்து இது தொடர்பான விளக்கமொன்றை காணொளி வடிவில் வெளியிட்டார் பாலா.

மேலும், கோயம்புத்தூரில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் அவர் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் இந்த சர்ச்சைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

“கெட்டது செய்தால்தான் பிரச்சினை வரும் என்பார்கள். ஆனால் நல்லது செய்தாலும் இங்கு பிரச்சினை வருகிறது. என்னைப் பற்றி தவறாகப் பேசி யூடியூப்பில் காணொளி போட்டால் பணம் கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான்.

“என் பக்கம் அனைத்தும் சரியாக இருக்கிறது. நான் யார் என்பது மக்களுக்குத் தெரியும். சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து காணொளி போட்டபோதுகூட, அவ்வாறு செய்யத் தேவையில்லை எனப் பலர் எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பினார்கள். நான் கடினமாக உழைக்கிறேன் என்று எனக்குத் தெரியும். நான் யாரிடமாவது பணம் வாங்கி ஏமாற்றியிருந்தால் என் மீது புகார் கொடுக்கட்டும். சும்மா உட்கார்ந்து பேசிக்கொண்டு தானே இருக்கிறார்கள். எவ்வளவு தடங்கல்கள் வந்தாலும் மக்களுக்காக உழைத்துக் கொண்டுதான் இருப்பேன்.” என்றார் பாலா.

குறிப்புச் சொற்கள்