அனைவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய நல்ல படமாக ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படம் உருவாகியுள்ளதாக சொல்கிறார் நடிகர் கவுண்டமணி.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு இவர் நாயகனாக நடித்துள்ளார். யோகி பாபு, சிங்கமுத்து உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் முன்னோட்டக்காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய கவுண்டமணி, ‘ஒத்த ஓட்டு முத்தையா’ வுக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்து ‘வெற்றி ஓட்டு முத்தையா’வாக மாற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
“என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எனக்கு முன்பு பேசிய பிரபலங்கள் பாக்கியராஜ், இயக்குநர் பி.வாசு, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் படத்தைப்பற்றி ஏற்கெனவே நிறைய பேசி விட்டனர்.
“என்னைப் பொறுத்தவரை இது அனைவரும் குடும்பத்தோடு திரை அரங்குக்குச் சென்று பார்க்க வேண்டிய தரமான படைப்பு என்பேன்,” என்றார் கவுண்டமணி.
இந்தப் படம் விரைவில் திரைகாண உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.