இனியும் தள்ளிப்போடப் போவதில்லை: பிரியா

2 mins read
f4b538be-2d81-41d6-801a-05c208ae7cc7
பிரியா பவானி சங்கர். - படம்: ஊடகம்

திரைத்துறையில் கால்பதிப்பதற்கு முன்பிருந்தே காதலில் விழுந்த நடிகை பிரியா பவானிசங்கர், தமது திருமணம் குறித்து மனந்திறந்து பேசியுள்ளார்.

நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்து, பின்னர் தொலைக்காட்சித் தொடரில் நடித்து, அதன்பின் திரையுலகிற்கு வந்தார் பிரியா.

ரத்னகுமார் இயக்கத்தில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர்.

அப்படத்தைத் தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் என வரிசையாக இவர் நடித்த படங்கள் வெற்றி பெற தமிழ்த் திரையுலக ரசிகர்களின் மனங்கவர் நாயகிகளில் ஒருவராக ஆனார்.

அருண் விஜய்யுடன் இணைந்து நடித்த ‘மாஃபியா’தான் இவருக்கு முதல் தோல்விப் படம்.

அதன்பிறகு பிரியா நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம், அகிலன், பத்து தல, ருத்ரன், பொம்மை, ரத்னம், இந்தியன்-2 எனப் பல படங்களும் வசூலில் சாதிக்கவில்லை.

இடையில், தனுஷுடன் சிறு வேடத்தில் இவர் நடித்திருந்த திருச்சிற்றம்பலம் வெற்றிப்படமாக அமைந்தது.

ஆனாலும், அப்படத்தில் இவர் கதாநாயகி இல்லை என்பதால், இவரை விரும்பாத சிலர் ‘ராசியில்லாத நடிகை’ என முத்திரை குத்தத் தொடங்கினர்.

இதனையடுத்து, “சில படங்கள் தோல்வியைத் தழுவுவது என்னால் கிடையாது. ஒருவர் மட்டுமே ஒரு சினிமாவை உருவாக்குவதில்லை. கமலுக்கே இந்தியன் - 2 சறுக்கலைக் கொடுக்கும் நிலையில், நானெல்லாம் எம்மாத்திரம்?” எனப் பதிலளித்துள்ளார் பிரியா.

இயக்குநர் அஜய் ஞானமுத்து, அருள்நிதியை நாயகனாக வைத்து இயக்கிய டிமான்டி காலனி படம் வெற்றிப் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து, விக்ரமை வைத்து பிரம்மாண்டமாக அவர் உருவாக்கிய கோப்ரா படம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில், டிமான்டி காலனி 2ஆம் பாகத்தை இயக்கியுள்ள அஜய் ஞானமுத்து அப்படத்தில் பிரியா பவானி சங்கரை நடிக்க வைத்துள்ளார். ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி அப்படம் வெளியாகவுள்ளது.

அப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியா, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்.

“பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு போட்டாலே எனக்கும் அந்த நடிகருக்கும் இடையே காதல் என்று கதைகட்டி விடுகிறார்கள்.

“ஹரிஷ் கல்யாண், அசோக் செல்வன் எல்லாம் என்னோட நல்ல நண்பர்கள். நல்லவேளையாக அவர்களுக்கெல்லாம் திருமணமாகிவிட்டது.

ஃபோட்டோ போட்டாலே போயிடுவேனென்று எப்படித்தான் நினைக்கிறார்களோ எனக் கூறும் இவர், சமூக ஊடகங்கள் வழியாக மோசமாகக் கருத்திடுவதைக் காணும்போது மனம் வேதனைப்படுவதாகவும் சொன்னார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே ராஜ் என்பவரைக் காதலித்து வருகிறார் பிரியா.

மேலும், தான் திரைத்துறைக்கு வந்ததற்கே அவர்தான் காரணம் என்றும் சொல்கிறார் பிரியா.

திருமணத்தைத் திட்டமிடுவதற்குச் சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டிருப்பதே தங்களது திருமணம் தள்ளிப்போவதற்குக் காரணம் எனக் கூறும் பிரியா, இனியும் தள்ளிப்போடாமல் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருப்பதாகவும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்