வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளார்.
‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘அறுவடை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படம் குறித்து அரசல் புரசலாக முன்பே தகவல் வெளியாகி இருந்தாலும், படத்தின் நாயகி யார் என்பது தெரியாமல் இருந்தது.
இதன் படப்பிடிப்பு ஜூலை 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பூஜா ஹெக்டே நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாகத் தகவல்.
அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ படத்திலும் பூஜாதான் நாயகியாக நடித்திருந்தார். படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
இதையடுத்து, பூஜாவுக்குப் பதில் மலையாள நடிகை மமிதா பைஜு நாயகியாக நடிப்பார் என்ற புதுத் தகவல் வெளியானது. ஆனால், இயக்குநர் தரப்பு இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளதாம்.
ரசிகர்களின் சந்தேகத்தைப் போக்க, பூஜா ஹெக்டே ஒப்பந்தமானது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.
இதற்கிடையே, வேல்ஸ் நிறுவனம் ஒரே சமயத்தில் பத்து புதுப் படங்களைத் தயாரிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.