“நீங்கள் என்றைக்கும் நன்றாக இருக்க வேண்டும்,” என நடிகர் லாரன்சை மனதார வாழ்த்தியுள்ளது ஓர் ஏழைக் குடும்பம்.
கடந்த வாரம் சமூக ஊடகங்களில் இந்தச் செய்தி வெளியாகி இருந்தது.
ஏழைக் குடும்பம் சேர்த்து வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை கரையான் அரித்துவிட்டது என்பதே அந்தச் செய்தி.
இதைப் படித்தவர்கள் எல்லாம் ஐயோ பாவம் என்று வருத்தப்பட்டதோடு ஒதுங்கிக்கொள்ள, நடிகர் ராகவா லாரன்ஸ் மட்டும் வழக்கம்போல், அந்தக் குடும்பத்தின் நிலையை எண்ணி பெரும் கவலையடைந்தார். உடனடியாக அவர்களை நேரில் அழைத்து, ரூ. 1 லட்சம் வழங்கி நெகிழ வைத்திருக்கிறார்.
அந்த ஏழைக் குடும்பத்தார் சிட்டுக் குருவி போல பல ஆண்டுகளாகச் சேமித்த ஒரு லட்சம் ரூபாயை ஒரு சிறிய டப்பாவில் போட்டு மண்ணில் புதைத்து வைத்துள்ளனர்.
அண்மையில் அவசரத் தேவைக்காக அதை எடுத்துப் பார்த்தபோது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பூமிக்குள் பாதுகாப்பாக இருக்குமென நினைத்து புதைத்து வைத்த பணம் முழுவதையும் கரையான் அரித்துவிட்டது.
துயரத்தில் அந்தக் குடும்பம் கண்ணீர் விட்டு அழும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த நிலையில், அந்தக் காணொளியைக் கண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், அந்தக் குடும்பத்தை நேரில் அழைத்து, ரூ. 1 லட்சம் வழங்கி நெகிழ வைத்திருக்கிறார்.
“ஒரு கூலித் தொழிலாளி குடும்பம் பல வருட சேமிப்பில் சேர்த்த ஒரு லட்ச ரூபாயைக் கரையான் அரித்த செய்தியைக் கேள்விப்பட்டேன்.
“அவர்கள் மனம் எவ்வளவு வேதனை அடைந்திருக்கும் என்பதை நினைத்து என் இதயம் பதறிப் போனது. அதனால், அவர்கள் இழந்த பணத்தை அவர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று தமது சமூகப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் லாரன்ஸ்.

