தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ‘ஏகே’ என அழைக்கப்படும் அஜித்குமார் கார், மோட்டார்சைக்கிள் பந்தயங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
அண்மையில், அவர் நடிப்பில் வெளியான ‛குட் பேட் அக்லி’ ரசிகர்களைக் கவர்ந்தது. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் கார் பந்தயத்தின் பக்கம் தமது கவனத்தைத் திருப்பியுள்ளார் அஜித்.
துபாய், பெல்ஜியம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது ஸ்பெயினில் நடைபெற்ற கார் பந்தயங்களில் ‛அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்றது.
செப்டம்பர் 28ஆம் தேதி நடந்த ‘கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப்’ போட்டியில் அஜித்தின் அணி, மூன்றாம் இடம் பிடித்தது.
அவரது அணிக்கு ரசிகர்கள் மட்டுமன்றி திரையுலகினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில், இந்திய ஊடகமான ‘ இந்தியா டுடே’ எனும் ஆங்கில நாளேடுக்கு அஜித் நேர்காணல் அளித்திருக்கிறார்.
அதில், தமது மனைவி குறித்தும் கார் பந்தயத்தில் தமக்கு இருக்கும் ஈடுபாடு குறித்தும் அவர் பேசியிருக்கிறார். அதிலிருந்து சில துளிகளை இதில் காணலாம்.
“ஷாலினி கையாளும் விஷயங்கள் ஏராளம். அவருடைய ஆதரவு இல்லையெனில், என்னால் இதையெல்லாம் செய்ய முடியாது. அவர்தான் வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக்கொள்கிறார்.
“பிள்ளைகள் என்னைப் பார்ப்பது அரிது. அவர்கள் என்னை நினைத்து ஏங்குவதுபோலவே நானும் அவர்களை நினைத்து ஏங்குகிறேன். எனினும், நீங்கள் நேசிக்கும் ஒன்றை செய்ய நினைத்தால் சில நேரங்களில் சில தியாகங்களைச் செய்துதான் ஆக வேண்டும்,” என அஜித் கூறியிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், “கார் பந்தயம் எனது மகனுக்குப் பிடிக்கும். இருப்பினும், என்னுடைய விருப்பத்தை அவர்மீது திணிக்க எனக்கு உடன்பாடில்லை. திரைத்துறை என்றாலும் சரி, பந்தயமாக இருந்தாலும் சரி எனது பிள்ளைகளின் விருப்பத்திற்கே முன்னுரிமை அளிப்பேன். அதற்கான ஆதரவை அவர்களுக்கு வழங்குவேன்,” என்றார் அவர்.
பந்தயங்களில் ஏற்படும் விபத்துகள் குறித்து பேசிய அவர், “போட்டியை முடிக்கும் வரை அல்லது விபத்தை சந்திக்கும் வரை நாம் எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை உணரமுடியாது. எப்படியாவது இலக்கை அடைய வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துவோம்,” என்று தெரிவித்திருக்கிறார்.
“துபாய் பந்தயத்திற்கு முன்பு தான் சந்தித்த விபத்து குறித்து பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், எந்தவொரு அணியிடமோ அல்லது பந்தயத்தில் வாகனம் ஓட்டுபவரிடமோ (ரேசர்) கேட்டாலும் விபத்துகள் வாகனப் பந்தய விளையாட்டின் ஓர் அங்கம் என்பர்.
“பந்தயத்திற்கான காரை வடிவமைக்கும்போதே அதை ஓட்டுபவரின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இருப்பினும், நீங்கள் காரின் வரம்புகளையும் உங்களின் வரம்புகளையும் தாண்டிச் செல்ல முயற்சிக்கும்போது, விபத்துகளும் மோதல்களும் நடப்பது இயல்புதான்.
“திரைப்படப் படப்பிடிப்புகளின்போது எனக்கு விபத்துகள் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக நான் அறுவை சிகிச்சைகளும் செய்துகொண்டிருக்கிறேன். அந்த விபத்துகளும், காயங்களும் திரைத்துறையின்மீது எனக்கு இருக்கும் ஈடுபாட்டைத் தடுக்கவில்லை,” என கார், மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் தமக்கு இருக்கும் ஆர்வம் குறித்து அஜித் விளக்கினார்.
இதற்கிடையே, “மோட்டார் ஸ்போர்ட்ஸ்’ பணக்காரர்களுக்கான விளையாட்டாகப் பார்க்கப்படுகிறது. அதை எல்லோருக்குமானதாக மாற்ற வேண்டும்,” என்றார் அஜித்.