தமிழ்த் திரையுலகத்தினரின் பார்வை மீண்டும் காதல், நகைச்சுவை பக்கம் திரும்பியுள்ளது.
‘கேங்கர்ஸ்’, ‘சுமோ’ ஆகிய படங்களின் வரிசையில், அடுத்து பிரபு தேவா நடித்துள்ள ‘யங் மங் சங்’ படமும் இணைந்துள்ளது.
இதில், ஆர்.ஜே.பாலாஜி, அஸ்வின் இருவரும் அவரது நண்பர்களாக நடித்துள்ளனர்.
‘குட் பேட் அக்லி’ படத் திரைக்கதையாளர்களில் ஒருவராக அறியப்பட்ட எஸ்.ஜே.அர்ஜுன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இவருக்கு நகைச்சுவை என்றால் மிகவும் பிடிக்குமாம். யாராவது, ‘அட நகைச்சுவைதானே’ என்று சாதாரணமாகக் குறிப்பிட்டால் தமக்குப் பெருங்கோபம் வரும் என்கிறார். காரணம், மற்ற நடிப்பைவிட நகைச்சுவைதான் மிகவும் சிரமமானது என்பது இவரது கருத்து.
“இந்த ‘யங் மங் சங்’ படத்தை மகிழ்ச்சியாக குடும்பத்துடன் பார்க்கலாம். வன்முறை, எதிர்மறை கருத்துகள் என எதுவும் இருக்காது.
‘‘17ஆம் நூற்றாண்டில் தொடங்கி 1987 வரை நடக்கும் கதை இது. அந்த ஊரில் பிரபு தேவாவின் அப்பா தங்கர் பச்சானுக்கு ஒரு பிரச்சினை வரும். அவர்கள் அனைவரும் கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பாட்டு, இசைக்கருவி என்று வாழ்க்கையை வாழ்பவர்கள்.
“ஆனால் பக்கத்து ஊர்க்காரர்கள் ஓயாத சண்டைக்காரர்கள். தங்கர் பச்சானுக்கு அந்த ஊரைத் தட்டி வைக்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
“அப்போது புரூஸ் லீயின் ‘எண்டர் தி டிராகன்’ படம் அந்த ஊரில் வெளியாகும். அதைப் பார்த்துவிட்டு, தன் பிள்ளைகள் பிரபு தேவா, ஆர்.ஜே.பாலாஜி, அஸ்வின் மூவரையும் குங்ஃபூ கற்றுக்கொள்ள சீனாவுக்கு அனுப்புவார். மூவரையும் வைத்து பக்கத்து ஊர்க்காரர்களை மிரட்டி அடக்கி வைக்க முடியும் என்பதுதான் அவரது திட்டம்,” என்கிறார் இயக்குநர் அர்ஜுன்.
“சீனா செல்லும் மூவரும் அங்கு குங்ஃபூ கற்றுக்கொண்டனரா? பக்கத்து ஊர்க்காரர்களை அடக்கி வைத்தார்களா என்பதுதான் கதையாம்.
“சீனா செல்லும் மூவருக்கும் அங்கே என்ன நடக்கிறது, குங்ஃபூவை அவர்களால் எந்த அளவிற்குக் கற்றுக்கொள்ள முடிந்தது என்பதெல்லாம் சுவாரசியமாக படமாக்கப்பட்டுள்ளன.
“பிரபு தேவாவுக்காக நாம் ஒரு காட்சியை உருவாக்கும்போது, அதை அவர் மெருகேற்றும் விதம் அருமையாக இருக்கும். அவரது உடல்மொழியில் பழம்பெரும் சந்திரபாபுவைப் பார்க்க முடியும். குங்ஃபூவின் அடவுகளை, அவர் உடலை வில்லாக வளைத்து நன்றாக வெளிப்படுத்துவார்.
“இந்தப் படத்தில் பிரபு தேவா இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். பாடல் பதிவின்போது அவர் ஒரு பொழுதுபோக்குக்காக சில வரிகளை முணுமுணுக்க, இசையமைப்பாளர் அம்ரீசுக்குப் பிடித்துவிட்டது. ‘அட, இதையே நாம் பயன்படுத்தலாமே’ என்று அவர் சொல்ல, மற்றொரு பாடலையும் அவரிடமே கொடுத்துவிட்டோம்.
“ஆர்.ஜே.பாலாஜியின் நகைச்சுவை எல்லாம் உச்சம் எனலாம். பதிலுக்குப் பதிலடி கொடுத்து வெளுத்துக் கட்டுகிறார்.
“தங்கர் பச்சான், காளி வெங்கட், முனீஸ்காந்த், ‘பாகுபலி’ பிரபாகர், மறைந்த நடிகர் மாரிமுத்து எனப் பல அருமையான நடிகர்கள் இதில் பங்கெடுத்துள்ளனர்.
“நடிகை லட்சுமி மேனன் பிரபு தேவாவின் இணையாக வருகிறார். அவரது கதாபாத்திரமும் பெரிதாகப் பேசப்படும்,” என்கிறார் இயக்குநர் அர்ஜுன்.
‘ஜாலியாக சேர்ந்து டிவி பார்க்கலையே, ராஜா பாட்டு கேக்கலையே’ என்ற பிரபு தேவா எழுதியுள்ள பாடல்களை இசையுடன் கேட்கும்போதும் திரையில் பார்க்கும்போதும் கூடுதல் சுவாரசியம் ஏற்படும்,” என்று படக்குழுவினர் உறுதியளிக்கிறார்கள்.