2012ஆம் ஆண்டில் புகழ்பெற்ற ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தார் குமாரி பிரகதி குருபிரசாத்.
அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி பின்னர் பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து திரையுலகில் பின்னணிப் பாடகியாகவும் வலம் வந்தார் பிரகதி.
சிங்கப்பூரில் பிறந்த வெளிநாட்டு வாழ் தமிழரான 27 வயது பிரகதி, தமது இசைப்பயணத்தில் கண்டுள்ள வளர்ச்சிக்கு தன் கர்நாடக, செவ்விசை பின்னணியே காரணமென பறைசாற்றுகிறார்.
ஒரு நல்ல அடித்தளமாகவும் இல்லாமல், தனக்குள் ஒழுக்கத்தையும் இசை விதைத்ததாகக் கூறினார் பிரகதி.
‘கர்நாடக இசையைத் தவிர்த்து வேறேதுவும் தெரியாது’
சென்னையில் சூப்பர் சிங்கர் போட்டியின் விளம்பரத்தைப் பார்த்து பிரகதியின் தாயார் திருமதி கனகா தம் மகளின் பாடல் பதிவு ஒன்றை அனுப்பியிருந்தார்.
முதலில் பாட்டி வீட்டிற்குச் சென்ற பதில் கடிதம், தவறுதலாகத் தூக்கி எறியப்பட்டதுடன் வாய்ப்பும் கைநழுவிப்போனது.
பிறகு ஏதேச்சையாக அப்போட்டியிலிருந்த ஒருவர் வெளியேறியதைத் தொடர்ந்து அவ்விடத்தை நிரப்ப இரண்டாவது தேர்வுச்சுற்று நடத்தப்பட்டது.
விதியின் விளையாட்டாக, அதன் மூலம் பிரகதிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிட்டியது.
தொடர்புடைய செய்திகள்
தொடக்கத்தில் திரையிசைப் பாடல்களில் எவ்வித நாட்டமும் கொண்டிராத பிரகதி, சூப்பர் சிங்கரில் களமிறங்கியது வியக்கத்தக்கது.
போட்டியிலிருந்து வெளியேற வேண்டுமென்றுகூடத் தோன்றியதாக அவர் பகிர்ந்துகொண்டார்.
ஆனால், தன் மகள் ஒரு சிறந்த பாடகி என்பதை தாம் சொல்வதைவிட இவ்வுலகம் பாரபட்சமின்றி சொல்ல வேண்டும் என்ற தன் தாயாரின் ஆசைக்கு இணங்கினார் பிரகதி.
அதேவேளையில் தமது கல்வியைப் பாதியிலே கைவிடாமல் தன் தந்தையின் விருப்பப்படி லாஸ் ஏஞ்சலிசின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டக்கல்வி பயின்றார்.
பெற்றோர்கள் இருவரும் பெரும் ஆதரவாகயிருந்த போதும் இசைத்துறையிலுள்ள ஏற்றத்தாழ்வும் நிச்சயமற்றத்தன்மையும் அவர்களுக்குப் பெரும் கவலையாக அமைந்தது.
அண்மையில் இசையமைப்பாளர் என்ற புதிய பரிமாணத்தில் ‘அடடா’ என்ற தமது முதல் பாடலை வெளியிட்டார் பிரகதி.
“அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற மனக்குழப்பத்தில் இருந்தேன். என் படைப்பாற்றலும் முடங்கியது போலவும் உணர்ந்தேன்”, என்ற பிரகதிக்குள் இசைத்துறையில் மற்றவர்களைச் சார்ந்திருக்கவேண்டியுள்ளதால் தன்னிச்சையாக செயல்பட முடியாதா என்ற ஏக்கமும் எழுந்தது.
அனிருத், ஏ. ஆர். ரஹ்மான் போல இசையமைக்க முடியாது என்றால் எதற்கு இசையமைக்கவேண்டும் என்று தன்னைத்தானே குறைத்து எடை போட்டிருந்தார் பிரகதி.
அந்நேரத்தில், ‘அடடா’ பாடல், பிரகதியின் இருள் சூழ்ந்த இசைப்பயணத்தில் வெளிச்சமாகப் பிறந்தது.
நீண்ட நாள் நண்பரும் இசைத்தயாரிப்பாளருமான ஷ்ரவன் ஶ்ரீதர் உட்பட இசைத்துறை நண்பர்கள் அளித்த ஊக்கத்தால் பிரகதி தமது முதல் பாடலை இசையமைத்ததோடு தாம் ஏற்படுத்திக்கொண்ட சுய சந்தேகங்களையும் ஓரங்கட்டினார்.
சிங்கப்பூருக்கு வந்தது வீட்டிற்கு வருவதற்கு சமம்
இசையமைக்கப்பட்ட பாடல்கள் பொதுவாக தனிப்பட்ட அனுபவத்திலிருந்து உருவாகும்.
அந்த வகையில் என்னைப் போல மற்ற பெண்களுக்கும் அவர்களுக்குப் பிடித்த அல்லது ரசிக்கவோ காதலிக்கவோ விரும்பும் ஆண்மகன் ஒருவர் இருப்பார்.
ஆனால் பெண்களின் கண்ணோட்டத்திலிருந்து காதலை வெளிப்படுத்தும் பாடல்கள் மிகக் குறைவு.
தாம் இசையமைத்த முதல் பாடலான ‘அடடா’ மூலம் இதுபோன்ற மேலும் பல பாடல்கள் உருவாக வேண்டும் என்பதே பிரகதியின் ஆசை.
அப்பாடலை அண்மையில் சிங்கப்பூரில் நடந்த ‘அடடா சுவாரே’ இசைநிகழ்ச்சியில் படைத்து மக்களிடமிருந்து நல்ல வரவேற்பையும் பெற்றார் பிரகதி.
இசையும் செயற்கை நுண்ணறிவும்
தொழில்நுட்பம் என்றுமே புதிய கண்ணோட்டத்தைத் தரக்கூடியதாகும்.
பம்பா பாக்யா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் போன்ற காலத்தால் அழியாத கலைஞர்களின் குரல்களை இனி கேட்கமுடியாதது ஒரு தீரா ஏக்கம்.
அதற்கு தொழில்நுட்பம் ஒரு நல்ல தீர்வு - செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு அக்கலைஞரின் குரலின் சாயலை உருவாக்கலாம்.
ஆனால் அதே தொழில்நுட்பத்தைக் கொண்டு இசைக் கலைஞர்களின்றி முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பாடல்களை இசையமைப்பது சரியான வழியல்ல என்றார் அவர்.
“ஓர் இசைக் கலைஞனின் படைப்பாற்றல் மிகவும் முக்கியம்; அதற்குத் தொழில்நுட்பம் ஒருபோதும் ஈடாகாது”, என்றார் பிரகதி.
வாழ்க்கை போகும் போக்கிலே போகும் மனப்போக்கு கொண்டுள்ள பிரகதி, கடந்த பத்தாண்டுகளில் நடந்தது எதுவும் தாம் திட்டமிட்டபடி நடந்தவையல்ல என்றார்.
அதன்படி “அடுத்த பத்தாண்டுகளும் அவ்வாறே இருக்கும்' என்றார் பிரகதி.
மக்கள் தம்மிடமிருந்து இன்னும் பல பாடல்களை எதிர்பார்க்கலாம் என்றார் பிரகதி குருபிரசாத்.

