மறைந்த இயக்குநர் கே. பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுகளை அள்ளி வருகிறார்.
இந்நிலையில், விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘அங்கம்மா’ என்ற படத்தில் கீதாவின் நடிப்பு பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) இப்படம் வெளியாகும் நிலையில், படத்தில் தன்னுடன் நடித்துள்ள சரண் சக்தி, பரணி, தென்றல் ரகுநாதன், வினோத் ஆனந்த் ஆகியோருடன் செய்தியாளர்களைச் சந்தித்தார் கீதா கைலாசம். அப்போது ‘அங்கம்மாள்’ கதாபாத்திரம் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.
“இந்தக் கதாபாத்திரமாக மாறுவதற்கு பயமில்லாத நேர்மை தேவைப்பட்டது. அவருடைய மௌனத்திற்கும் பெருமைக்கும் இதயத்துடிப்பிற்கும் முழுமையாக சரணடையவும் வேண்டியிருந்தது.
“கிராமத்தில் படமாக்கப்பட்டதால் ஒவ்வொரு காட்சியிலும் நான் நடிக்கும் முறையே மாறிப்போனது. இந்தக் கதையை மிகுந்த உணர் திறனுடன் வடிவமைத்த இயக்குநர் விபினுக்கு நன்றி,” என்றார் கீதா கைலாசம்.
ஒத்திகை பார்க்காமலேயே தமது கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடிக்க இயக்குநர் அனுமதித்ததாக குறிப்பிட்ட கீதா கைலாசம், சரண் சக்தி உள்ளிட்ட அனைவரது நடிப்பும் இந்தக் கதையை உண்மையாக உணர வைத்தது என்றார்.
“படம் வெளியானதும் ’நாடோடிகள்’ படப்புகழ் பரணியின் நடிப்பு நிச்சயம் பேசப்படும்,” என்றார்.
இப்படம் படக்குழுவுக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் நிச்சயமாக புது அனுபவத்தைத்தரும் என்றும் ஒரு தலைமுறையின் வலிமையை எடுத்துச் சொல்லும் என்றும் கீதா கைலாசம் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரங்களை நன்கு உணர்ந்து நடித்தோம். அந்த வகையில் நூறு விழுக்காடு உண்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டோம். இதுபோன்ற படங்களுக்கு எத்தகைய வரவேற்பை அளிக்க வேண்டும் என்பது ரசிகர்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களின் ரசனையை நான் பெரிதும் மதிக்கிறேன். ரசிகர்கள் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்றார் கீதா கைலாசம்.

