அண்மை காலமாக இணையச் சூதாட்டத்தில் சிக்கி ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்துள்ளனர். சிலர், உயிரை மாய்த்துக்கொள்ளும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இதன்காரணமாகவே இதுபோன்ற சூதாட்டச் செயலிகளைப் பிரபலப்படுத்திய விளம்பரங்களில் நடித்த நடிகர், நடிகைகள்மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நடிகர் சரத்குமாரும் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில், தற்போது சூதாட்டச் செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா, நடிகை நிதி அகர்வால் உள்ளிட்ட 25 பேர் மீது தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதையடுத்து, தமது செயலுக்கு மன்னிப்புக் கோரி நடிகர் பிரகாஷ்ராஜ் தமது இணையப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2016ஆம் ஆண்டு சூதாட்டச் செயலி குறித்த விளம்பரம் ஒன்றில் நடித்தேன். ஆனால் அதில் நடித்த பிறகுதான் அது தவறு என்பதை நான் உணர்ந்தேன். ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்த தவற்றுக்காக இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இளையர்கள் இஅதுபோன்ற சூதாட்டச் செயலியைப் பயன்படுத்தி பணத்தை இழக்க வேண்டாம் ,” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.