தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

படம் முழுவதும் சடலமாக நடிக்கும் பிரபு தேவா

3 mins read
afd37e88-0cca-4eab-97b6-3ce5bc446496
பிரபு தேவா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

ஒரு படம் முழுவதும் உயிரற்ற சடலமாக நடித்துள்ளார் பிரபு தேவா. தமிழ்த் திரையுலகில் எந்த ஒரு கதாநாயகனும் முழுப் படத்திலும் இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை.

சக்தி சிதம்பரம் இயக்கும் இந்தப் படத்தில் மொத்தம் நான்கு நாயகிகளாம்.

‘என்னம்மா கண்ணு’, ‘சார்லி சாப்ளின்’, ‘காதல் கிறுக்கன்’, ‘வியாபாரி’ போன்ற படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர் சக்தி சிதம்பரம். இந்நிலையில் நடனம், நடிப்பு, கதை திரைக்கதை, பின்ணனிப் பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட பிரபு தேவாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது எதிர்பாராமல் கிடைத்த பரிசு என்கிறார் சக்தி சிதம்பரம்.

எந்தப் படமானாலும் அதனை ஜாலியான கதையாக உருவாக்கும் இயக்குநர்களில் சக்தி சிதம்பரத்துக்கு எப்போதுமே முதலிடம்தான். அதேசமயம் சமூகத்துக்குத் தேவையான ஒரு நல்ல கருத்தையும் சொல்லத் தவறமாட்டார் என்று பதிலுக்கு இயக்குநரைப் பாராட்டுகிறார் பிரபு தேவா.

படம் பார்க்கும் ரசிகர்கள் வாய் விட்டுச் சிரித்து, அந்தத் தருணத்தைக் கொண்டாடி மகிழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் இயக்குநரும் பிரபு தேவாவும் கூட்டணி அமைத்திருக்கிறார்களாம்.

அதனால்தான் ‘ஜாலியோ ஜிம்கானா’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளதாக விளக்கம் கிடைக்கிறது.

முதலில் எழுதிய கதையின்படி பிரபு தேவா வேறு கதாபாத்திரத்தில்தான் நடிக்க இருந்தாராம்.

ஆனால், முழுக்கதையையும் கேட்ட பிறகு, ‘நான் வேண்டுமானால் சடலமாக நடிக்கட்டுமா?’ என்று கேட்டுள்ளார் பிரபு தேவா. ஆனால், சக்தி சிதம்பரம் ‘ரசிகர்கள் ஒத்துக்கொள்வார்களா’ என்று சந்தேகம் எழுப்ப பிரபுதேவாதான் அவரைச் சமாதானப்படுத்தி இருக்கிறார்.

“எத்தனையோ கதைகள், கதாபாத்திரங்களில் நடித்தாகிவிட்டது. ஒரு முறை சடலமாக நடித்தால் என்ன ஆகிவிடும்,” என்று பிரபு தேவா சொல்லப்போக தனது கதையில் சில முக்கிய மாற்றங்களைச் செய்திருக்கிறார் சக்தி சிதம்பரம்.

ஒரு சடலம், அதைச்சுற்றி நான்கு பெண்கள். இந்த ஐந்து பேரையும் சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் கதையாம்.

“கதையைக் கேட்டபோது எந்த அளவுக்கு கலகலப்பாகவும் ஜாலியாகவும் இருந்ததோ அப்படித்தான் படப்பிடிப்பின்போதும் இருந்தது,” என்கிறார் நாயகிகளில் ஒருவரான மடோனா செபாஸ்டியன்.

இறந்து போனவரின் சடலம் ஒன்றரை நாள்களில் துர்நாற்றம் வீசத்தொடங்கிவிடும். அதனால் மொத்த கதையும் ஒன்றரை நாள்களில் நடந்து முடிந்ததுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

“மொத்த படத்திலும் நான் பத்து நிமிடங்கள் மட்டுமே உயிருடன் நடமாடுவேன். அதுவும்கூட அவசியமில்லை என்று நான் வலியுறுத்தியதை இயக்குநர் ஏற்க மறுத்துவிட்டார்.

“ரசிகர்கள் அதை விரும்பமாட்டார்கள் என்று அவர் கூறிவிட்டதால், நானும் அமைதியாகிவிட்டேன். எனினும், 10 நிமிடங்களுக்குள் நான் நடனமாடும் காட்சிகள், வசனம் பேசும் காட்சிகள் வந்து போகும்.

“சில காட்சிகளில் ஓர் உயிரற்ற சடலம் நடனமாடினால் எப்படி இருக்கும் என்பதை யோசித்து அதற்கு ஏற்ப படமாக்கியுள்ளார் சக்தி சிதம்பரம்.

“இதற்கு முன்பு ‘மகளிர் மட்டும்’ படத்தில் காலஞ்சென்ற நடிகர் நாகேஷ் ‘டெட் பாடி’யாக நடித்துள்ளார். அவர் அந்தப் படத்தில் சிறிது நேரம் செய்ததை படம் முழுவதும் செய்திருக்கிறேன். அவர் வழியில்தான் இந்த கதாபாத்திரத்தை அணுகி உள்ளேன்,” என்கிறார் பிரபு தேவா.

35 ஆண்டுகளாகத் தாம் திரையுலகில் நீடித்து வருவதாகக் குறிப்பிடுபவர், திரையுலகில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகத் தாம் கருதவில்லை என்கிறார்.

“ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் அனைத்து துறையிலுமே ஏதாவது மாற்றம் ஏற்படும். அப்படித்தான் விசிடி, டிவிடி ஆகியவை அறிமுகமாகி இப்போது ஓடிடி காலம் வந்துள்ளது. இந்த ஓடிடி என்பது சினிமாவை இன்னும் நமக்கு நெருக்கமானதாக மாற்றியுள்ளது.

“மொழி, தேசம் ஆகியவற்றைக் கடந்து உலகளாவிய படங்கள் உருவாக வித்திட்டுள்ளது. வேண்டுமானால் இதை ஒரு நல்ல மாற்றம் என்று கூறலாம்.

“எதையும் தீவிரமாக நம்பினால், அது தானாக நடக்கும் என்பதைத்தான் இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். எனது வாழ்க்கையில் திரையுலகில் அறிமுகமானது தொடங்கி இதுவரை எதையுமே நான் திட்டமிடவில்லை.

“எல்லாம் தானாக நடந்ததுதான். மேலும், அப்பா எனக்கான அடிப்படையை ஏற்கெனவே தயார் செய்திருந்தார். அதற்கென நானும் என் சகோதரர்களும் எங்களால் எதைச் சிறப்பாக செய்ய முடியுமோ அதைச் செய்தோம்.

“நமக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் போதும், எந்தத் துறையிலும் சாதிக்க முடியும்,” என்று தத்துவார்த்தமாகப் பேசுகிறார் பிரபு தேவா.

குறிப்புச் சொற்கள்