தமிழ்த் திரையுலகில் தமிழ் பேசத் தெரிந்த கதாநாயகிகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படத்தின்மூலம் அறிமுகமாகி, தற்போது தென்னிந்தியத் திரையுலகில் வேகமாக வளர்ந்துவரும் இளைய நடிகையாகத் திகழ்கிறார் திருச்சிப் பெண் பிரீத்தி முகுந்தன்.
“ஒழுங்காக நடிக்கத் தெரியாமல் ஒத்திகையின்போது நம்மை நாமே அவமானப்படுத்திக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுவிடும்,” என்று 18 வயதில் ‘மாடலிங்’ செய்தபோது அஞ்சியதாகத் தனது தொடக்கக்கால அனுபவத்தை அண்மை நேர்காணலின்போது பகிர்ந்துகொண்டார் பிரீத்தி.
“அந்த நேரத்தில் என் பெற்றோர் நேரடியாகக் கல்லூரி விடுதிக்கு காரில் வந்து என்னிடம் பேசினர்.
“‘ஏன் முயற்சி செய்யக்கூடாது? பரவாயில்லை, இதுதான் தொடக்கம். நீ முயற்சி செய்து பார்க்க வேண்டும்’ என்று அவர்கள் என்னை ஊக்கப்படுத்தி ஒத்திகைக்கு அனுப்பினர். அவர்களின் அந்த வார்த்தைகள்தான் எனக்கு முதல் அடியை எடுத்து வைக்கத் தைரியம் தந்தது.
“அந்த முதல் கலைத்திறன் தேர்வில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அந்த அனுபவம்தான் சினிமாமீது எனக்கு ஓர் உண்மையான காதலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது,” என்றார் பிரீத்தி.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) பொறியியல் பட்டம் பெற்ற இவர், ஐந்தாம் வயதிலிருந்தே பரதநாட்டியம், ஹிப்-ஹாப், சமகால நடனங்களைக் கற்றுத் தேர்ந்தவர்.
புகழ்பெற்ற கர்நாடக இசை கித்தார் கலைஞர் பிரசன்னாவின் மருமகளும், கணித மேதை சீனிவாச ராமானுஜத்தின் மனைவி ஜானகி அம்மாள் வழிவந்த உறவினருமான இவர், ‘ஆசை கூட’ பாடல் காணொளிமூலம் இணையத்தில் புகழ்பெற்றார்.
அண்மையில் வெளியான ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில் அர்ஜுனுடன் இணைந்து அதிரடிச் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்து அசத்தினார்.
எந்தக் காதல் காட்சிகளும் இன்றி இவர் வெளிப்படுத்திய அதிரடி நடிப்பு ரசிகர்களிடையே ‘ஆக்ஷன் அழகே’ எனப் பெரும்பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.
அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கவுள்ள நடிகர் தனுஷின் 56வது திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இவரை அணுகியுள்ளனர்.
தற்போது தெலுங்கில் ‘கண்ணப்பா’, மலையாளத்தில் ‘சர்வம் மாயா’, தமிழில் அதர்வாவுடன் ‘இதயம் முரளி’ எனப் பல மொழிப் படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

