கடந்த சில ஆண்டுகளாகவே மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் திரைப்படங்களின் முன்னோட்டக் காட்சித்தொகுப்புகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அண்மைக்காலமாக குறுமுன்னோட்டக் காட்சித்தொகுப்புகள் (டீசர்), அறிமுகக் காணொளிகள் ஆகியவற்றுக்கும் ரசிகர்கள் ஆதரவளித்து வருகின்றனர்.
அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரன்’, ஜீவா நடித்துள்ள ‘பிளாக்’, யோகி பாபு நடித்துள்ள ‘மிஸ் மேகி’ அகிய படங்களின் அறிமுக, டீசர் காணொளிகள் வெளியாகி உள்ளன.
‘அமரன்’
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரன்’ படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், இவரது கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் விதமாக காணொளி ஒன்றைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தில் ‘இந்து ரெபேக்கா வர்கீஸ்’ என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. அக்டோபர் 31ஆம் தேதி வெளியீடு காண உள்ளது ‘அமரன்’ படம். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அறிமுகக் காணொளியில், மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவியாக நடிக்கும் சாய் பல்லவி, 2015ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
பிரதமர் மோடி, அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகிய இருவரும் மேடையில் அமர்ந்துள்ள நிலையில், சாய் பல்லவி கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. காணொளி முழுவதும் உற்சாகமாகக் காணப்படுகிறார் சாய் பல்லவி.
இறுதியில் ’கடலுக்கும் ஆகாயத்துக்கும் இடையில் உள்ள தூரம் அவனுக்கும் எனக்கும்’ என்ற வசனத்துடன் காணொளி நிறைவடைகிறது.
காஷ்மீரில் இந்திய ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படம்.
‘மிஸ் மேகி’
யோகி பாபுவும் மாதம்பட்டி ரங்கராஜனும் நடித்துள்ள ‘மிஸ் மேகி’ படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித்தொகுப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வழக்கறிஞராக அறிமுகமாகும் யோகி பாபு, நீதிமன்றத்தில் சரியாக வாதாட முடியாமல் தவிக்கிறார். அவருக்கு நிறைய கடன் இருப்பதாகவும் காட்டப்படுகிறது.
மேலும், ஆங்கிலோ இந்தியன் மூதாட்டி தோற்றத்திலும் திரையில் தோன்றி கலகலப்பூட்டுகிறார் யோகி. மறுபக்கம் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் நாயகி ஆத்மிகாவுக்கும் இடையேயான காதலை விவரிக்கிறார் இயக்குநர் லதா ஆர் மணியரசு.
மொத்த டீசரும் நகைச்சுவைத் தோரணமாக காட்சியளிக்கிறது. கார்த்திக் இசையமைத்துள்ள அப்படத்தில், வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
‘ப்ளாக்’
ஜீவா நடித்துள்ள ‘ப்ளாக்’ படத்தில் அவரது ஜோடியாக நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர். படம் முழுவதும் பிரியா ஒருவிதப் பதற்றத்துடன் இருப்பதாகக் காட்டப்படுகிறது.
ஒரு வீடு, இரண்டு கதாபாத்திரங்கள் அவர்களைச் சுற்றி நடக்கும் திகில் சம்பவங்கள் என்று காட்சிகள் நகர்கின்றன.
அதே சமயம் சில ஜாலியான காட்சிகளும் இடம்பெறும் என்றும் இந்தப் படம் பார்ப்போர் சிரிப்பதற்கும் வாய்ப்புண்டு என்றும் இயக்குநர் மறைமுக உத்தரவாதம் அளித்திருப்பதை உணர முடிகிறது. திகிலும் மர்மமும் நிறைந்த சில காட்சிகள் சுவாரசியமாகவே இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இப்படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் வெளியாகவில்லை.