ஒரு நாட்டின் பிரதமரைப் பார்க்க வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம். ஆனால், ஒரு பிரதமரே ஒரு பிரமுகரைச் சந்திக்க விரும்பி அழைப்பு விடுத்தால் எப்படி இருக்கும்.
இப்படிப்பட்ட அழைப்பு திரைப்பட இயக்குநர் எஸ்.பி.பொன்சங்கருக்கு வாய்த்திருக்கிறது. தாம் இயக்கியுள்ள ‘ஃபிளாக்’ என்ற திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்களுக்காக சிறப்புக் காட்சியாக திரையிட உள்ளார் பொன்சங்கர்.
அதன் பிறகுதான் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் வெளியாகுமாம்.
திடீரென்று பிரதமர் வரை தொடர்புகொண்டு பேசி இருக்கிறீர்கள். நேரில் சந்தித்தும் இருக்கிறீர்களே. என்ன விஷயம் என்று கேட்டால், எந்தவிதமான பந்தாவோ பாசாங்கோ இல்லாமல் பாந்தமாக வருகிறது பொன்சங்கரின் பதில்.
“இன்று டெல்லி செங்கோட்டை முதல் தமிழகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை பல்வேறு இடங்களில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்படுகிறது. தேசியக் கொடிகள் கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி அருகே உள்ள தெங்கேரி கிராமத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன.
“அமைச்சர்களின் வாகனங்கள் முதல், அனைத்து அரசு விழாக்களிலும் அந்தக் கொடியை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். கதைப்படி அந்த கொடிகளுக்குத் தரச்சான்றிதழ் வழங்கும் பொறுப்பு ஒரு பெரியவரிடம் உள்ளது. தன் கையால் செய்யப்பட்ட தேசியக் கொடியை செங்கோட்டையில் இந்திய அதிபர் ஏற்றி வைக்கும் காட்சியை ஒரு முறையாவது அருகில் இருந்து பார்த்துவிட வேண்டும் என்பதுதான் அந்தப் பெரியவரின் வாழ்நாள் லட்சியமாக இருந்துள்ளது.
“ஆனால், விதியின் விளையாட்டால் அந்தக் கனவு நிறைவேறாமல் முதியவர் நோய்வாய்ப்படுகிறார். தாத்தாவின் கனவை, தன் கனவாக கருதும் பேரன் தனியாக டெல்லிக்குச் செல்கிறான்.
“டெல்லிக்குச் செல்ல வேண்டிய அந்தச் சிறுவன் வழிதவறி நாடு முழுவதும் சுற்றித்திரிய வேண்டியிருக்கிறது. அப்போது பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்துப் பேசிப் பழகும் வாய்ப்பும் கிடைக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“தன் தாத்தாவின் கனவை அவன் நிறைவேற்றினானா? என்பதுதான் ‘ஃபிளாக்’ படத்தின் கதை,” என்கிறார் பொன்சங்கர்.
‘கொட்டுக்காளி’, ‘இட்லிகடை’ ஆகிய படங்களில் நடித்த சிறுவன் திஹான், பேரன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறுவனுடன் பயணம் செய்யும் அழகிய இளம்பெண்ணாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பௌஷா நடித்துள்ளார்.
படத்தின் இயக்கம், ஒளிப்பதிவு ஆகியவற்றை பொன்சங்கர் கவனித்துக்கொள்ள, ராஜா ரவிவர்மன் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம் இது. நாடு முழுவதும் நான்கு பெரிய கார்களில் பயணம் மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்தியுள்ளார் பொன்சங்கர். இதற்கு 56 நாள்கள் தேவைபட்டதாம்.
தமிழ்நாட்டைக் கடந்துவிட்டால் அனைத்து இடங்களிலும் தமிழனை அந்நியனாகப் பார்க்கிறார்கள் என்று ஆதங்கப்படுகிறார் பொன்சங்கர்.
பல இடங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது தேசியக் கொடியை பயன்படுத்தினார்களாம். ஆனால், பொதுமக்களோ அதை அரசியல் கட்சிக்கொடி என்று நினைத்து படக்குழுவினரை விரட்டி அடித்தார்களாம்.
‘ஃபிளாக்’ படம் குறித்து பிரதமர் மோடி என்ன சொன்னார்?
நேரில் சந்தித்தபோது அவர் சொன்ன வார்த்தைகளை வாழ்நாளில் மறக்கவே இயலாது. ‘இது உலகத்தரம் வாய்ந்த படம். வாய்ப்பு இருந்தால் நானே இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் விளம்பரப்படுத்துவேன்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் பிரதமர்,” என்கிறார் பொன்சங்கர்.

