சூர்யா நடித்திருக்கும் ‘ரெட்ரோ’ படம் மே 1ஆம் தேதி வெளியாக இருப்பதால் அதன் முன்பதிவு தொடங்கியுள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், சுவாசிகா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் திரைப்படம் ‘ரெட்ரோ’.
‘ரெட்ரோ’ என்பது கடந்த காலத்தை குறிக்கும் சொல் என இயக்குநர் விளக்கம் அளித்திருந்தார். அண்மையில் வெளியான இப்படத்தின் முன்னோட்டக் காட்சி பெரும் வரவேற்பை பெற்றது.
இதில், கண்ணாடி பூக்கள், கனிமா பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கி வருகிறது. அரபிக்குத்து பாடலுக்கு பிறகு கனிமா பாடல் மூலம் பூஜா ஹெக்டே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். மேலும் சூர்யாவின் ‘ரெட்ரோ’ வசூல் சாதனை படைக்குமா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.
‘கங்குவா’ படத்தைத் தாண்டி ‘ரெட்ரோ’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் சூர்யா ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ‘கோட்’, ‘குட் பேட் அக்லி’ படத்தின் சாதனையைத் தாண்டி ‘ரெட்ரோ’ புதிய சாதனையைப் படைக்குமா என்பதே சினிமா விநியோகஸ்தர்களின் கேள்விக்குறியாக உள்ளது. ‘ரெட்ரோ’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
‘ரெட்ரோ’ படம் மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் நிலையில் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் தீவிரமாக நடைபெற்றன. தமிழில் இப்படத்திற்கான பிரம்மாண்ட விழாவை சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடத்தினார்கள்.
தெலுங்கில் விளம்பரப்படுத்த ஹைதராபாத்தில் உள்ள ஜேஆர்சி கன்வென்ஷன் சென்டரில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சூர்யாவுடன் ஒப்பிடும்போது விஜய் தேவரகொண்டா ஜுனியர் நடிகர்தான். இருந்தாலும் ‘ரெட்ரோ’ படம் இளைஞர்களுக்கான படம் என்பதால் தெலுங்கில் உள்ள இளம் ரசிகர்களைக் கவரும் விதத்தில் விஜய்யை அழைத்திருந்தார்கள்.
மேலும் படத்தில் தெலுங்கு ரசிகர்களின் அபிமான நாயகியான பூஜா ஹெக்டேவும் நடித்திருப்பதால் அது படத்திற்கு கூடுதல் பலத்தைச் சேர்த்திருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த விழாவில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சூர்யா வெளியிட்டார். அடுத்ததாக வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதை நாக வம்சி தயாரிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். அது தமிழ்ப் படமாக உருவானாலும் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்தில்தான் படமாக்கவுள்ளதாகவும் தனது பேச்சில் குறிப்பிட்டார் சூர்யா.
‘ரெட்ரோ’ படத்தினைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதன் படப்பிடிப்பு இன்னும் பாக்கி இருக்கிறது. இதனை முடித்துவிட்டு தான் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சூர்யா.
இதற்கிடையில் ‘ரெட்ரோ’ படத்தை முக்கிய விஐபிக்களுக்கு போட்டு காண்பித்து கருத்துக் கேட்டார் கார்த்திக் சுப்பராஜ். குறிப்பாக, சூர்யாவுக்கு முதல் காட்சியை போட்டு காண்பித்திருக்கிறார். அப்போது முழுப் படத்தையும் பார்த்துவிட்டு “படம் திருப்தியாக இருக்கிறது. என்னை மகிழ்ச்சிப்படுத்தி விட்டீர்கள். இந்தப் படம் என்னுடைய ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும்,’’ என்று கூறியுள்ளார் சூர்யா.
அதோடு இந்தப் படத்தை இன்னும் பார்க்காத ஜோதிகாவோ, முன்னோட்டக் காட்சியைப் பார்த்து விட்டேன். இந்தப் படம் வெற்றி பெறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் அதில் தெரிகிறது என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி சூர்யா- ஜோதிகா இரண்டு பேரிடத்தில் இருந்தும் நல்ல விமர்சனங்கள் வந்ததால் உற்சாகத்தில் இருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.
முதல் நாள் வசூலில் ‘கங்குவா’வை மிஞ்சுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறது கோலிவுட்.