வன்மத்துடன் இருப்பவர்களை கண்டுகொள்வதே இல்லை: பிரியாலயா

3 mins read
c3dc8fd4-4cab-4873-a15b-257489838c02
பிரியாலயா. - படம்: ஊடகம்

‘குட்நைட்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியாலயா.

அதன் பின்னர் ‘இங்க நான்தான் கிங்கு’, அண்மையில் வெளியான ‘டிரெண்டிங்’ என அடுத்தடுத்த படங்களின் மூலம் சினிமா ரசிகர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியுள்ளார் பிரியாலயா.

இவர் தமிழ் பேசும் விதம், கோர்வையான தமிழ் வார்த்தைகள், தமிழ் ரசிகர்களை நிச்சயம் கவரும் எனலாம்.

பிரியாலயாவின் சொந்த ஊர் சேலம். தகவல் தொழில்நுட்ப வல்லுநர். முன்னணி ஐடி நிறுவனத்தில் வேலையில் இருந்தார்.

“கொஞ்ச காலம்தான் வேலை செய்தேன். அதன் பிறகு, என் கவனம் சினிமா பக்கம் திரும்பிவிட்டது.

“எங்கள் குடும்பத்தில் முதல் சினிமா நடிகை நான்தான். முதல் பொறியாளரும் நான்தான்.

“சினிமா என்றதும் அப்பாவும் அம்மாவும் வேண்டாம் எனத் தடுத்தனர். அது பாதுகாப்பாற்ற துறை எனக் கேள்விப்பட்டிருந்ததால் எல்லாருக்கும் பயம். நான்தான் இருவருக்கும் தைரியமூட்டினேன்.

“இங்கே யாரும் எதற்காகவும் நம்மைக் கட்டாயப்படுத்தவில்லை. நாம் விருப்பப்பட்டு தேர்வு செய்வதுதான் எதிர்காலப் பணியாக அமையும். எனவே, பயப்பட வேண்டாம் என்றேன்.

“பின்னர் சந்தானத்துடன் ஒரு படம் நடித்து, அது வெளியானதும் பெற்றோரின் பயம் போய்விட்டது,” என்கிறார் பிரியாலயா.

கல்லூரியில் படிக்கும்போதே சிறு சிறு வேடங்களில் நடிக்கும் வாய்ப்புகள் இவரைத் தேடி வந்திருக்கின்றன. அப்படித்தான் ‘குட்நைட்’ படத்தில் நடித்திருக்கிறார். கூடவே, நிறைய விளம்பரங்கள், குறும்படங்களிலும் நடித்துள்ளாராம்.

பிரியாலயாவுக்குப் பரதநாட்டியம் அத்துப்படி. முறைப்படி கற்றுக்கொண்டதால் பரதநாட்டியம் தொடர்பான சிறு, குறு காணொளிகளை எடுத்து ‘யூடியூப்’ தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதைப் பார்த்துத்தான் சந்தானம் தனது படத்தில் நடிக்க இவரை அழைத்தாராம்.

“உடனே நான் கதாநாயகி ஆகிவிட்டதாக நினைத்துவிட வேண்டாம். நடிப்புத் தேர்வு, ஒப்பனைத் தேர்வு ஆகியவை முடித்த பிறகுதான் நாயகியாகத் தேர்வானேன்.

“என்னைப் பொறுத்தவரை சினிமா சார்ந்த ஆசைகள் நிறைய உண்டு. நடிகர்கள் விக்ரம், மாதவன், சிம்பு ஆகியோருடன் எப்படியாவது ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும். எல்லா இயக்குநர்களுமே என்னை வைத்துப் படமெடுக்க விரும்ப வேண்டும். நல்ல நடிகை என்று பெயர் வாங்குவதுடன், ஒரு படத்திலாவது ராணி அல்லது இளவரசி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததாக பாராட்டு பெற வேண்டும்,” என்று கூறும் பிரியாலயா, தற்போது நடிகர் வெற்றியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

மேலும் சில பட வாய்ப்புகள் கைவசம் இருந்தாலும், அவை குறித்து இப்போது எந்த விவரங்களையும் அளிக்க இயலாதாம். அதிகாரபூர்வ தகவல் வெளியான பிறகு வெளிப்படையாகப் பேசலாம் என்கிறார்.

தற்போது நடிகர் கலையரசனுடன் இவர் இணைந்து நடித்த ‘டிரெண்டிங்’ படம் வெளியாகி உள்ளது. இது நடிகர் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்.

‘டிரெண்டிங்’ படம் இன்றைய இளையர்களுக்குப் பிடித்த படமாக இருக்கும். இணையத்தில் பல்வேறு தளங்களில் இயங்குவோர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக, மின்னிலக்கப் படைப்பாளர்கள் தேவையற்ற கவர்ச்சி, ஆபாசத்தைத் தவிர்க்க வேண்டும்.

“சிலர் சமூக ஊடகங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி, அவற்றின் மூலம் ஆபாசமாக கருத்து தெரிவிப்பார்கள். இவ்வாறு வன்மத்துடன் இருப்பவர்களை நான் கண்டுகொள்வதே இல்லை. என் போக்கில் சென்றுவிடுவேன். இன்று இளம் பெண்கள் இவ்வாறு இருப்பதுதான் நல்லது,” என்கிறார் பிரியாலயா.

குறிப்புச் சொற்கள்