கடந்த புதன்கிழமையன்று தனது 41வது பிறந்தநாளை அமைதியாகவும் எளிமையாகவும் கொண்டாடி உள்ளார் நடிகை பிரியாமணி.
எனினும், பிரபல ஓடிடி தளமான ஹாட்ஸ்டார், பிரியாமணியின் பிறந்தநாள் பரிசாக, அவரது நடிப்பில் உருவாகும் புதிய இணையத்தொடர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
‘குட் வைஃப்’ என்ற பெயரில் உருவாகும் இத்தொடரில் சம்பத்ராஜ், ஆரி அர்ஜுனன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். மூத்த நடிகை ரேவதி இந்தத்தொடரை இயக்குகிறார்.
ஓர் இரவில் நாயகியின் வாழ்க்கையில் அனைத்தும் மாறிப்போகிறது. அவள் தனது குடும்பத்துக்காக போராடத் தொடங்குகிறாள். இது ஒரு குடும்பப் பெண்ணின் போராட்டங்களைச் சொல்லும் கதையாக இருக்குமாம்.
“இது என் நடிப்பில் உருவாகும் முதல் இணையத்தொடர். வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்,” என உற்சாகத்துடன் சொல்கிறார் பிரியாமணி.