பிரியங்காவின் முதல் வழிகாட்டி விஜய்: தாயார் நெகிழ்ச்சி

3 mins read
72c0fb32-5ea6-42cc-9c34-ece9fb59d778
‘தமிழன்’ படத்தில் விஜய், பிரியங்கா சோப்ரா. - படம்: ஊடகம்

‘தமிழன்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

தற்போது இந்தித் திரையுலகிலும் ஹாலிவுட்டிலும் கோலோச்சி வரும் அவரின் அனுபவங்கள் குறித்து அவரது தாயார் மது சோப்ரா நினைவுகூர்ந்தார்.

பிரியங்காவின் சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் பரேலி பற்றி அவர் அடிக்கடி பேசினாலும், அவருக்குத் திரைத்துறையில் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியது மும்பைதான். இந்தச் சூழலில் அவரின் ஆரம்பகாலத் திரைப்பயணம் குறித்தும் தமன்னா தத், நடிகர் விஜய் ஆகியோருடன் பிரியங்காவுக்கு இருந்த நட்பு பற்றியும் பல்வேறு தகவல்களை இந்திய ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் மது சோப்ரா கூறினார். கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படம்தான், பிரியங்கா சோப்ராவின் முதல் திரைப்படம். தன்னுடைய திரையுலகப் பயணத்தை விஜய்யுடன் தொடங்கினார் அவர்.

“அப்படத்தில் நடிக்கும்போது பிரியங்காவுக்கு 19 வயதுதான். திரைத்துறை பற்றி பெரிதும் அறியாத அவருக்கு நடிகர் விஜய் நம்பிக்கை அளித்தார்,” எனப் பிரியங்காவின் தாயார் தெரிவித்தார்.

“விஜய் மிகவும் நல்ல மனிதர். ஆரம்பத்தில் விஜய் குறித்து பயத்துடன் பிரியங்கா இருந்தார். விஜய்யைவிட அனுபவத்திலும் வயதிலும் மிகவும் குறைந்தவரான என் மகள் பெரிய நட்சத்திரமான அவருடன் எப்படி இணைந்து நடிக்க முடியும் என்று நானும் பயந்தேன்,” என்றார் மது. ஆனால், விஜய் மிகவும் அன்பாக நடந்துகொண்டார் எனவும் விஜய்தான் பிரியங்காவின் முதல் வழிகாட்டி எனவும் அவர் சொன்னார். நம்பிக்கை இழக்கும் போதெல்லாம் பிரியங்காவை மனந்தளர விடாமல் விஜய் பார்த்துக்கொண்டதாகவும் கூறி நெகிழ்ந்தார் மது.

மேலும், “விஜய் சிறப்பாக நடனம் ஆடுவார். பிரபுதேவாவின் சகோதரர் ராஜு சுந்தரம்தான் ‘தமிழன்’ படத்தின் நடன இயக்குநர். நடன அசைவுகள் மிகவும் கடினமாக இருந்தாலும் பிரியங்காவை அவர்கள் நன்றாக கவனித்துக் கொண்டனர்,” எனக் கூறி பிரியங்காவிள் அப்பட அனுபவங்களை அவரது தாயார் பகிர்ந்தார். அழகிப் போட்டியில் பிரியங்கா வெற்றிபெற்ற பிறகு, மும்பையில் குடும்பத்துடன் குடியேறியதாகச் சொன்ன மது, தமது மகளின் ஆரம்பகட்ட திரை வாழ்க்கை குறித்துப் பேசினார்.

குறிப்பாக, மும்பையின் காண்டிவலி பகுதியில் தங்கள் உறவினர்களுடன் வசித்ததாக அவர் குறிப்பிட்டார்.

“முதலில், ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வது மிகவும் கடினமாக இருந்தது. உள்ளூர் ரயிலில் செல்ல வேண்டியிருந்தது. நாங்கள் காண்டிவலியிலிருந்து காலை 5.30 மணிக்குப் புறப்பட்டு, 6.30 மணிக்கு பயிற்சியாளர் மிக்கி மேத்தா வசித்த இடத்தை அடைவோம்,” எனத் தெரிவித்தார்.

“இருப்பினும், மற்ற பெரிய நகரங்களைப் போல மும்பையில் பயமில்லை. ஏனெனில், இரவில் தாமதமாக வெளியே சென்றாலும் எளிதாக அச்சமின்றி வீட்டிற்கு ஒரு டாக்சியை எடுத்து வந்துவிடலாம்,” என மது கூறினார்.

“பின்னர் சாண்டாக்ரூசில் உள்ள விடுதிக்கு மாறினோம். அதுவும் நன்றாக இருந்தது. அங்குதான் தமன்னா தத்தாவும் பிரியங்கா சோப்ராவும் சந்தித்தனர். அப்போதிலிருந்து இருவரும் நண்பர்களாகினர். பொதுவாக, நாங்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. சவால்கள் வந்தாலும், அவற்றை எப்படிக் கையாள்வது என்பது பிரியங்காவிற்குத் தெரியும்,” எனத் தமது மகளின் ஆளுமைத் திறன் குறித்து பெருமையோடு சொன்னார் மது சோப்ரா.

குறிப்புச் சொற்கள்