பிரியா நடித்தாலே பெரிய பலம்தான்: விக்னேஷ் கார்த்திக்

3 mins read
6d0af80a-82dd-4425-8e8b-179e99c0a1d4
பிரியா பவானி சங்கர். - படம்: peakpx.com
multi-img1 of 3

’ஹாட் ஸ்பாட்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் ’ஹாட் ஸ்பாட் டூ மச்’ உருவாகி வருகிறது. இதில் பிரியா பவானி சங்கர், அஸ்வின், பாவனிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முதல் பாகத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக்தான் இதையும் இயக்குகிறார். நடிகர் விஷ்ணு விஷாலின் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.

“முதல் பாகத்தில் சில காட்சிகள் காரணமாக ‘ஏ’ சான்றிதழ் கிடைத்தது. இரண்டாம் பாகம் அப்படிப்பட்ட படமாக இருக்காது. அனைத்துத் தரப்பு ரசிகர்களும் படம் பார்க்கலாம்.

“இதில் நகைச்சுவை அதிகமாக இருக்கும். சமூகத்துக்கான பல கருத்துகளும் இருக்கும். குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்க வேண்டும் என முடிவு செய்து உருவாக்கப்பட்ட படம் இது.

“முதல் பாகம் பிடித்துப் போனதால்தான் இரண்டாம் பாகத்தை வெளியிட முன்வந்தார் விஷ்ணு விஷால். படத்தின் வியாபாரம், விளம்பரம் என அனைத்திலும் ஆதரவாக உடன் நிற்கிறார்.

“இரண்டாம் பாகத்தை எடுக்கும்போது அதிகம் உழைக்க வேண்டி இருக்காது என்று அவர் கூறினார். ஆனால் அது சரியல்ல. முதல் பாகம் போன்று இதுவும் மற்றொரு படம்தான். எனினும் முதல் பாகம் ரசிகர்களின் நம்பிக்கையைப் பெற்றதால் இரண்டாம் பாகத்தைப் பார்க்க வருவார்கள், புது ரசிகர்களும் கிடைப்பார்கள்,” என்கிறார் விக்னேஷ் கார்த்திக்.

முதல் பாகத்தில் கதாநாயகன் ஒரு தயாரிப்பாளரைச் சந்தித்துக் கதை சொல்வதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ‘ஆந்தாலஜி’ படம் என்பதால் நான்கு கதைகளைக் கையாண்டிருப்பார் விக்னேஷ்.

அதேபோல் இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் கதை சொல்ல வருவாராம். இரு பாகங்களுக்கும் இடையே இது மட்டுமே தொடர்பாம். மற்ற அனைத்துமே புதிதாக இருக்கும் என்கிறது படக்குழு.

பிரியா பவானியைத் தேர்வு செய்ய என்ன காரணம்?

முதல் பாகம் வெளியான சமயத்தில் அதைப் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாகத் தொலைபேசிவழி தொடர்புகொண்டு பாராட்டினார் பிரியா பவானி.

“அப்போதிலிருந்தே இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றலாம் என்று மேலோட்டமாக பேசி வருகிறோம். பிரியாவுக்கு இதுவரை அழுத்தமான கதாபாத்திரங்கள் அமையவில்லை. இந்தப் படம் அந்தக் குறையைப் போக்கும்.

“கடந்த காலத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளர் எனப் பல்வேறு பணிகளைச் செய்தவர் என்பதால் இந்த படத்தில் அவருக்கு மிகப் பொருத்தமான கதாபாத்திரம் அமைந்துள்ளது எனலாம்.

“வசனங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. எனவே, அவர் கடந்த கால பணிகள் இந்தக் கதாபாத்திரத்துக்குக் கூடுதல் பலமாக இருக்கும் எனத் தோன்றியது. நான் எழுதியதைவிட அவரது நடிப்பும் வசன உச்சரிப்பும் அருமையாக இருந்தது. அவர் ஒரு படத்தில் நடித்தாலே பெரிய பலம்தான்.

“மொத்தத்தில் இதுவரை பார்த்த பிரியாவைவிட கூடுதல் புத்துணர்ச்சி, அழகான நடிப்புடன் கூடிய பிரியாவைத் திரையில் காண்பீர்கள்.

“படத்தின் தொடக்கத்தில் எந்த மாதிரியான ஆதரவைப் படக்குழுவுக்கு வழங்கினாரோ, படத்துக்கான அவரது பங்களிப்பு முடியும் வரை அப்படியே நீடித்தது,” என்று பாராட்டுகிறார் விக்னேஷ் கார்த்திக்.

‘ஆந்தாலஜி’ படம் என்பதால் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனராம். இந்தப் புத்தாண்டின் தொடக்கத்திலேயே ‘ஹாட் ஸ்பாட் டூ மச்’ திரைகாண உள்ளது.

இந்தப் புத்தாண்டில் முன்னணி நாயகனுடன் இணைந்து பணியாற்ற உள்ளாராம் விக்னேஷ். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்.

குறிப்புச் சொற்கள்