நடிகர் கருணாசின் மகன் கென் நடித்து இயக்கியுள்ள படம் ‘யூத்’. முதன்முறையாக இதில் கதாநாயகனாக நடிக்கவும் செய்துள்ளார் கென்.
‘சிறை’ அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், சின்ன தமிழா எனப் பலரும் நடித்திருக்கும் இத்திரைப்படம், வெறும் பாராட்டுகளை மட்டுமல்ல, திரையரங்குகளில் நல்ல வசூலையும் அள்ளி வருகிறது.
சூட்டோடு சூடாக படத்தின் தெலுங்குப் பதிப்பையும் வெளியிட்டுள்ளனர். அதன் விளம்பர நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்றிருந்தார் கென். தெலுங்கு ரசிகர்களின் ஆதரவும் அவரை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.
“நான் ‘யூத்’ கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். அனைவருக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால், படத்தின் பட்ஜெட்டில்தான் சிக்கல். நான் அறிமுக நடிகர் என்பதால் பல விதத்தில் தடை ஏற்பட்டது. நான் தயாரிப்பாளர்களைப் பற்றி தவறாக ஏதும் சொல்லமாட்டேன். நான் எப்படி இந்தப் படத்தை எடுப்பேன் என அவர்கள் நம்புவதற்கு கடினமாக இருந்திருக்கலாம்.
“பிறகு, என்னுடைய நண்பரும் இயக்குநருமான அம்மாமுத்து சூர்யாவிடம் ‘எப்படியாவது எனது நண்பர்களுடன் சேர்ந்து இந்தப் படத்தை எடுத்துவிடப் போகிறேன்’ என்றேன். அப்போதுதான் அவர் இப்படத்தைத் தயாரித்திருக்கும் கருப்பையாவை எனக்கு அறிமுகப்படுத்தினார்,” என்று நடந்தவற்றை நினைவுகூர்ந்துள்ளார் கென்.
தயாரிப்பாளர் கருப்பையாவிடம் கதையை விவரித்த பிறகு இருவரும் தேநீர்க் கடைக்குச் சென்றுள்ளனர். அங்கு தேநீருக்கான 50 ரூபாய் செலுத்தக்கூட அவரிடம் பணம் இல்லையாம். ஆனால், கென் கூறிய கதையைப் படமாக்க எவ்வளவு தொகை தேவைப்படும் என விடாமல் கேட்டுக்கொண்டிருந்தாராம்.
“அவர் என்னை முழுமையாக நம்பினார். நான் அவரை முழுமையாக நம்பினேன். அவரிடம் நான் ‘என்னை ஒரு கதாநாயகனாக நிலைநிறுத்துவதற்கு இந்தப் படத்தைச் செய்கிறேன். ‘உங்களுடைய முதலீட்டிற்கு நல்ல பதில் கிடைக்கும். பணத்தை வீணாக்கமாட்டேன்’ என்றேன். அவர் என் மீது நம்பிக்கை வைத்தார். இன்று நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.
“நான் ஒரு படத்தை இயக்கி, அது திரையிடப்படும் திரையரங்குக்குச் செல்லும்போது, ரசிகர்கள் என்னைப் பார்த்து ஆரவாரமாக வரவேற்பார்கள் என்றெல்லாம் கற்பனைகூட செய்ததில்லை. ஆனால், இப்போது நடப்பவற்றை நம்பவே முடியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
“நான் மிகவும் ஆசைப்பட்ட ஒரு விஷயம் உண்மையாக நடக்கிறது. நாம் வெகுவாக ஆசைப்பட்ட ஒன்று நிச்சயமாக நடக்கும்போது அது நம்பும்படி இருக்காது என்று என் அப்பா அடிக்கடி சொல்வார்.
“என் ஆசையை நிறைவேற்றிய தயாரிப்பாளருக்கு நன்றி. அப்பா, அம்மாவைப் பெருமைப்படுத்தத்தான் இந்த ‘யூத்’ படத்தை உருவாக்கினோம். அது நடந்திருக்கிறது,” என்று கூறியுள்ளார் கென்.
‘யூத்’ படம் குறித்து வெளியான அனைத்து விமர்சனங்களையும் பார்த்து, படித்து மனத்தில் பதிய வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது தவறுகளை அடுத்தடுத்த படங்களில் சரிசெய்ய முயற்சி செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
படத்தின் வசூல் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் வெற்றிக்குப் பங்களித்த அனைவருமே அடுத்தடுத்த கட்டத்துக்குப் போவது உற்சாகம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார் கென்.
“இந்தப் படம் என் வாழ்க்கையை இப்படி மாற்றிவிடும் என நினைக்கவே இல்லை. ‘யூத்’ படம் எனக்கு நிறைய சொல்லிக்கொடுத்திருக்கிறது. ஒரு நாயகனாக இந்தப் படம் என்னை மாற்றி இருக்கிறது,” என்று தமது பேட்டியில் மேலும் கூறியுள்ளார் கென் கருணாஸ்.

