சூர்யா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ‘புறநானூறு’ படமும் ஒன்று. இது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருந்தது. எனினும், திடீரென அந்தப் படத்தில் இருந்து வெளியேறினார் சூர்யா.
கதை பிடிக்காததால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது. சூர்யா நடிக்க மறுத்த அந்தக் கதைதான் தற்போது ‘பராசக்தி’யாக மாற்றப்பட்டு, அதில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
இந்நிலையில், சூர்யா ஏன் ‘புறநானூறு’ படத்தில் இருந்து விலகினார் என்பது குறித்து சுதா கொங்கரா விளக்கம் அளித்துள்ளார்.
“இந்தக் கதை ‘கொரோனா’ காலகட்டத்தில்தான் உருவானது. சூர்யாவுக்கு தொலைபேசியிலேயை கதையை விவரித்தேன். அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார். இதையடுத்து கதையை மெருகேற்ற சில ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதில் ஈடுபட்ட வேளையில் திடீரென தொடர்புகொண்ட சூர்யா, தம்மால் தொடர்ச்சியாக கால்ஷீட் ஒதுக்க இயலாது என்றார். ஆனால், தயாரிப்புத் தரப்பிலோ தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினால்தான் செலவு குறையும் என்றனர்.
“சூர்யா கடைசிவரை தன் நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. அதனால்தான் அவர் ‘புறநானூறு’ படத்தில் இருந்து வெளியேறினார்,” என்று கூறியுள்ளார் சுதா கொங்கரா.
இவர் ஏற்கெனவே சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கியவர். அது விமர்சன, வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
எனவே, இருவரும் மீண்டும் கூட்டணி அமைக்கும் படம் சிறப்பான படைப்பாக இருக்கும் என சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

