அல்லு அர்ஜூன் நடித்திருக்கும் ‘புஷ்பா 2’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக ஏழு நகரங்களுக்குச் செல்கிறது படக்குழு.
கடந்த 2021ஆம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் ‘புஷ்பா’. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் உருவாகி உள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி அன்று திரைக்கு வருகிறது.
‘புஷ்பா’ முதல் பாகத்தின் வெற்றிக்கு பாடல்கள், விளம்பர நிகழ்ச்சிகள்தான் பெரும் பலமாக அமைந்தது. அதைப்போல் ‘புஷ்பா 2’ஆம் பாகத்திற்கும் விளம்பர நிகழ்ச்சிகளைப் படக்குழு திட்டமிட்டு வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, ‘புஷ்பா 2’ முன்னோட்டக் காட்சி வரும் நவம்பர் 17ஆம் தேதி அன்று வெளியாகிறது. இந்த முன்னோட்டக் காட்சி பாட்னாவில் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து கோல்கத்தா, சென்னை, கொச்சி, பெங்களூர், மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ள ‘புஷ்பா 2’ விளம்பர நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளனர்.
இந்தப் படத்தின் முதல் பாகத்தில் ‘ஊ சொல்றியா’ என்ற பாடலுக்கு சமந்தா குத்தாட்டம் ஆடி இருப்பார். தற்பொழுது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஸ்ரீ லீலா குத்தாட்டம் ஆடியிருக்கிறார். இவரின் நடனத்திற்குப் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். அதனால் பலரும் படம் வெளியாகும் நாளுக்காகக் காத்திருக்கின்றனர்.