தற்போது அல்லு அர்ஜுன் சர்ச்சை பல்வேறு திருப்பங்களை எடுத்து வருகிறது. ‘புஷ்பா 2’ படம் வெளியான சந்தியா திரையரங்கில் கூட்ட நெரிசலில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் அல்லு அர்ஜுனைப் படாதபாடு படுத்துகிறது. அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீ தேஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ரேவதியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவியை அறிவித்தார் அல்லு அர்ஜுன். ஆனால், அதை அவர் உடனே வழங்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
வழக்கறிஞர்களுக்கு பணம் கோடி கோடியாக கொடுக்கிறார். ஆனால், ஸ்ரீதேஜ் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ.25 லட்சத்தை வழங்கவில்லை என பல்வேறு விமர்சனங்கள் அவரைத் துரத்தி அடித்தன.
இந்நிலையில், தான் அறிவித்த நிதி உதவியை அல்லு அர்ஜுன் ரேவதியின் குடும்பத்தினருக்கு காசோலையாக வழங்கியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவனின் குடும்பத்தினரைச் சந்தித்து காசோலை வழங்கப்பட்டது.
படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, அல்லு அரவிந்த், இளமஞ்சிலி ரவி ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர். பின்னர் சிறுவனின் தந்தைக்கு ஆறுதல் கூறிய அவர்கள், ரூ.2 கோடி நிதியுதவியையும் வழங்கினர்.
இதனைப் படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த 2 கோடி ரூபாய் நிதியுதவியில் அல்லு அர்ஜுன் சார்பில் 1 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. ‘புஷ்பா 2’ படத்தின் தயாரிப்பாளர்களும் இயக்குநர் சுகுமாரும் தலா ரூ.50 லட்சத்தை வழங்கியுள்ளனர்.
செய்தியாளர் சந்திப்பு நடத்தி, விவரங்களைத் தெரிவித்த அல்லு அரவிந்த், மருத்துவர்களிடம் ஸ்ரீதேஜின் உடல்நிலைப் பற்றி விசாரித்து அறிந்துகொண்டதாகவும் ஸ்ரீதேஜின் தந்தை பாஸ்கரிடம் பேசி அவருக்குத் தைரியம் அளித்ததாகவும் கூறினார்.
ஸ்ரீதேஜ் குடும்பத்திற்கு இந்த 2 கோடி ரூபாய் வழங்கப்படுவதற்கு முன்பு மைத்ரி மூவீஸ் நிறுவனம் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. அதற்கான அந்தக் காசோலையும் ஸ்ரீதேஜாவின் தந்தை பாஸ்கரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையில் இந்த வழக்கு பற்றி இயக்குநர் சுகுமாரிடம் கேட்டபோது, “திரையரங்கில் ரேவதி என்ற பெண் பலியானது எனக்கும் அல்லு அர்ஜுனுக்கும் பெரும் மனவலியைத் தந்தது. அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் எனக்கு மனஉளைச்சலை தந்துள்ளன. அதனால் சினிமாவிலிருந்து விலக நினைக்கிறேன்,” என்று கூறி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளார்.