தனது மனைவி சாய்ரா பானுவைப் பிரிந்துவிட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உறுதி செய்துள்ளார்.
இதனால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை தனது கணவர் ஏ.ஆர்.ரகுமானைப் பிரிவதாக சாய்ரா பானு அறிவித்தார். இதுகுறித்து தங்களுடைய திருமண பந்தம் முப்பது ஆண்டுகள் நீடிக்கும் எனக் கருதியதாக ரகுமான், தமது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“அனைத்துமே எதிர்பாராத முடிவுகளைத்தான் கொண்டுள்ளன. கடவுளின் சிம்மாசனம்கூட உடைந்த இதயங்களினால் நடுங்கும். மேலும், உடைந்தவை மீண்டும் சேராது. இந்த இக்கட்டான சமயத்திலும் உங்கள் அன்பிற்கும் எங்கள் தனியுரிமையை மதித்ததற்கும் நன்றி,” என்று பதிவிட்டுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.
இதனிடையே, தமது பெற்றோர் பிரிந்துவிட்டதை ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீனும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார்.
“இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி,” என்று அதில் பதிவிட்டுள்ளார்.
இசைப்புயலின் வாழ்க்கையில் புயல் வீசிவிட்டதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.