ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட பாடல்

2 mins read
d25bd8cf-350a-45aa-b305-31253524ac36
ஏ.ஆர். ரகுமான். - படம்: ஊடகம்

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தேசிய தினம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2 ) கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு அபுதாபி அல் வத்பா பகுதியில் ஷேக் ஜாயித் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சிறப்பு இசை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு அவர் இசையமைத்த ஜமால் அல் இத்திகாத் என்ற சிறப்புப் பாடல் வெளியிடப்பட்டது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் நிறுவனத் தந்தை என போற்றப்படும் முன்னாள் அதிபர் மறைந்த ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யானின் தொலைநோக்குப் பார்வையில் விளைந்த சாதனைகள், அந்நாட்டின் வளர்ச்சி, புதுமை மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் மதிப்புகளால் உருவான அடையாளங்களை முன்னிலைப்படுத்தி இசை உருவாக்கப்பட்டிருந்தது.

ஏறக்குறைய 80,000 பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா மற்றும் பெண்களால் நடத்தப்படும் அவரது இசைக்குழுவினரும் பங்கேற்றனர்.

இது குறித்து பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஜமால் அல் இத்திகாத் என்ற பாடலை உருவாக்கும் பணி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது என்றார்,.

“ஆனால் உலகளாவிய பதற்றங்கள், போர்கள் காரணமாக பாடலை வெளியிட தாமதமானது. இந்த மோதல்கள் முடிவுக்கு வர வேண்டும் என விரும்பினோம். இப்போது அதற்கான சரியான நேரமாக உள்ளது.

“ஜமால் அல் இத்திகாத் என்பது நம்பிக்கைக்கான நல்ல தொடக்கத்தைக் குறிக்கும். இந்த நாட்டைக் கட்டி எழுப்புவதற்கும் அதன் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் அனைத்து மக்களையும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் அரவணைக்கிறது. அன்பு, பெருமை, முன்னேற்றத்தில் இணக்கமான தனித்துவமான நாடு இது. இப்பாடல் மனிதர்களின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது,” என்று ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்