குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான்

2 mins read
5e5907b0-cbf5-4791-af8e-4ff3aedc790e
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். - படம்: ஹிந்துஸ்தான் டைம்ஸ்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அண்மையில் அளித்த ஒரு நேர்காணலைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தான் யாரையும் புண்படுத்த அப்படிச் சொல்லவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

‘பிபிசி ஏசியன் நெட்ஒர்க்’கிற்கு அண்மையில் திரு ரகுமான் அளித்த நேர்காணலின், அண்மை ஆண்டுகளாக இந்தித் திரையுலகில் வகுப்புவாத அடிப்படையிலான ஆதிக்கம் மிகுந்து வருகிறது என்றும் தமக்குப் பட வாய்ப்புகள் குறைவாகக் கிடைப்பதற்கு மதவாத சிந்தனையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார்.

தற்போது படைப்பாற்றல் இல்லாத சிலர் முக்கிய முடிவுகளை எடுப்பதே பாலிவுட்டில் அதிகாரம் மாற காரணம் என்றும் அதில் அவர் கூறியிருந்தார்.

மேலும், “வரலாற்றுத் திரைப்படமான ‘சாவா’ பிரிவினையைத் தூண்டும் விதமாக இருக்கிறது. ஆனால், அதன் உள்ளடக்கம் துணிவைக் காட்டுவதாக இருப்பதால் அந்தப் படத்துக்கு இசையமைத்தேன்,” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இக்கருத்துகள், இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரணாவத்தும் ஏ.ஆர்.ரகுமான்மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“இவரைப் போன்ற ஓர் எதிர்மறையான, பாரபட்சமான நபரை நான் பார்த்ததில்லை,” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், சர்ச்சைகளுக்கு விளக்கமளித்து ஏ.ஆர்.ரகுமான் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் காணொளி வெளியிட்டார்.

அதில் அவர், “அன்பு நண்பர்களே! இசை என்பது எப்போதும் என்னுடைய தொடர்பு மொழியாகவும் இந்தியாவின் கலாசாரத்தைக் கொண்டாடவும் கௌரவிக்கும் விதமாகவும் இருக்கிறது.

“இந்தியா எனது முன்மாதிரி, எனது ஆசிரியர், எனது வீடு. சில நேரங்களில் நம்முடைய நோக்கங்கள் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும் என்பதை உணர்ந்துள்ளேன். ஆனால், என்னுடைய குறிக்கோள் எப்போதும் இசை வழியாக கலாசாரத்தை உயர்த்துவதும் கொண்டாடுவதுமே,” என்று ரகுமான் கூறியுள்ளார்.

“எப்போதுமே பிறர் வருந்த வேண்டுமென்று நினைக்கமாட்டேன். என்னுடைய நேர்மை உங்களுக்குப் புரியுமென நினைக்கிறேன்,” என்றார் அவர்.

“இந்தியக் குடிமகனாக வாழ்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். ஏனெனில், பல கலாசாரங்களை உள்ளடக்கிய குரலைக் கொண்டாடவும் கருத்துச் சுதந்திரத்திற்கும் இந்தியாவில் எப்போதும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு பயணமும் என் குறிக்கோளை வலுப்படுத்துகிறது. ஜெய்ஹிந்த், ஜெய் ஹோ,” என்று தமது காணொளியை முடித்தார் ரகுமான்.

குறிப்புச் சொற்கள்