`டெஸ்ட்’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக என் பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். ரசிகர்கள் எனது இசையமைப்பு நன்றாக உள்ளது எனப் பாராட்டுவது உற்சாகம் அளிக்கிறது,” என்கிறார் சக்திஸ்ரீ கோபாலன்.
இவர் தனது வசீகரக் குரலால் தமிழ் சினிமா ரசிகர்களைக் கட்டிப்போட்டிருப்பவர்.
`நெஞ்சமே நெஞ்சமே...’, `தேன் சுடரே...’, `அகநக...’ எனப் பல வெற்றிப் பாடல்களில் ஒலிப்பது இவரது தேன் குரல்தான்.
`டெஸ்ட்’ திரைப்படத்துக்கு இசையமைத்ததை, வார்த்தைகளால் விவரிக்க முடியாத சில உணர்வுகளை இசை மூலம் சொல்ல கிடைத்த வாய்ப்பாகத்தான் பார்க்கிறாராம். அண்மைய பேட்டியில் மனம்திறந்து பல விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.
“டெஸ்ட்’ படத்தின் இயக்குநர் சஷிகாந்திற்கும் இது முதல் படம் என்பதால் இருவருமே பல புது முயற்சிகளை மேற்கொண்டோம்.
“பெர்க்லீ கல்லூரியில் (Berklee college) இசை குறித்துப் படிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. ஆர்க்கிடெக்ட் படிப்பை முடித்திருந்தாலும் நியூயார்க்கில் உள்ள அந்தக் கல்லூரியில் சேர வேண்டும் எனத் தீவிரமாக முயன்றேன்.
“அந்தச் சமயத்தில் தொடர்ந்து பாடல்கள் பாடிக்கொண்டிருந்தேன். கடைசி நேரத்தில் நியூயார்க் கிளம்பும் போதுகூட எதிர்காலம் குறித்து நிறைய சந்தேகங்கள் எழுந்தன.
“அது கொரோனா நெருக்கடி வேளை என்பதால் பல வேலைகள் வெவ்வேறு இடங்களில்தான் நடந்து கொண்டிருந்தன. நியூயார்க்கில் இருந்தபடியே `மாறா’ படத்துக்காக ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு பின்னணிக் குரல் கொடுத்திருந்தேன்.
தொடர்புடைய செய்திகள்
“அதுபோல் `ப்ளூ ஸ்டார்’ படத்தில் வருகிற `ரயிலின் ஒலிகள்’ பாடலும் நியூயார்க்கில் இருந்தபோது பாடியதுதான். இப்படிப்பட்ட வாய்ப்புகள் அமைய வேண்டும் என்பதுதான் எனக்கான ஆசீர்வாதம் போலிருக்கிறது.
“கொரோனாவுக்குப் பிறகு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதும் நான் முதன்முதலாகச் சென்ற இடம் ஏ.ஆர்.ரகுமானின் ஒலிப்பதிவுக் கூடம்தான். அங்கே `அகநக...’ பாடல் பதிவானது.
“எனக்கு ரகுமானின் ஸ்டூடியோ ஒரு கோவில் மாதிரி. அவரது ஸ்டூடியோ பெயர் பஞ்சதன். அதனால் பஞ்சதன் கோவில் என்றுதான் குறிப்பிடுவேன்.
“அங்கு சென்றாலே மனம் அமைதியாகிவிட்டது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். அவரது மகன் அமீன், மகள் கதீஜா ஆகியோருடனும் இணைந்து பணியாற்றி உள்ளேன்,” என்று சொல்லும் சக்திஸ்ரீ கோபாலன், ஆர்கிடெக்ட் நிபுணராகவும் திரைக்கலைஞராகவும் ஒரே சமயத்தில் இரு துறைகளில் ஈடுபட்டுள்ளார்.
பின்னணிக் குரல் (டப்பிங்) கொடுப்பதில் இவருக்கு ஆர்வம் அதிகமாம்.
இதற்கு முன்பு `கடல்’ படத்தில் லட்சுமி மஞ்சுவுக்கும் `நிழல்’ படத்தில் நயன்தாராவுக்கும் பின்னணி பேசியுள்ளார்.
தனியிசைக் கலைஞர்கள் பலர் சிறப்பாகச் செயல்படுவதாகப் பாராட்டுபவர், சாய் அபயங்கர், எம்.எஸ்.கிருஷ்ணா, அறிவு, பால் டப்பா, அசல் கோளாறு எல்லாருமே நல்ல திறமைசாலிகள் என அப்பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளார் சக்திஸ்ரீ.