இந்தியாவிலும் ரேசிங் போட்டிகளை நடத்த வேண்டும்: ‘ஜென்டில்மேன் ஓட்டுநர்’ அஜித் விருப்பம்

2 mins read
a7a59d3c-9808-49f9-ac91-cb26d357983b
விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற அஜித் குடும்பம். - படம்: ஊடகம்
multi-img1 of 2

முன்பே நாம் கூறியபடி, குடும்பத்துடன் இத்தாலியின் வெனிஸ் நகருக்குச் சென்றுள்ளார் நடிகர் அஜித். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு ‘ஜெண்டில்மென் ஓட்டுநர் விருது’ வழங்கப்பட்டது.

குடும்பத்துடன் சென்று விருதைப் பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளாராம் அஜித்.

‘கார் ரேசிங்’ களத்தில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வரும் இவருக்கு ‘எஸ்ஆர்ஓ மோட்டார் ஸ்போர்ட் குழுமம்’ இந்த விருதை வழங்கி கௌரவித்திருக்கிறது.

இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற இந்த விருது விழா குறித்து அஜித் மனைவி ஷாலினி சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“வெனிஸ் நகரில் என் கணவருக்கு விருது வழங்கப்படும்போது அவருக்கு அருகில் நிற்பதில் பெருமையாக இருந்தது. தொழிலதிபரும் ரேசிங் ஓட்டுநருமான ஃபிலிப் சாரியோல் நினைவாக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது,” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார் ஷாலினி.

இந்த விருதைப் பெறுவதில் பெருமையடைவதாகக் கூறினார் அஜித்.

“இந்தத் தருணத்தில் ரேசர் ஃபிலிப் சாரியோலை நான் நினைவுகூர விரும்புகிறேன். சாரியோல் குறித்து நான் நிறைய நல்ல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

“அவர் அன்பானவர், அற்புதமான மனிதர், பலருக்கும் ஊக்கமளித்திருக்கிறார். இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகத்தில் என்னுடைய அனுபவம் சவாலாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருந்திருக்கிறது.

“இந்தச் சமயத்தில் என்னுடைய குழுவினருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். என்னுடைய குடும்பத்திற்கும் என் திரைத்துறை நண்பர்களுக்கும் நன்றி. மோட்டார் ஸ்போர்ட்சை அடையாளப்படுத்தத் தொடங்கியிருக்கும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார் அஜித்.

இந்த இடத்தில் தாம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவில் இதுபோன்ற ரேசிங் போட்டிகளை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

“இப்படியான போட்டித்தொடர்களில் பங்கேற்பதற்கு நாங்களும் விருப்பத்துடன் இருக்கிறோம். இந்தியாவும் மோட்டார் ஸ்போர்ட்சில் உலகளவில் சாதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார் அஜித்.

குறிப்புச் சொற்கள்