நான் வேலைக்குச் செல்வதை ரகுவரன் விரும்பவில்லை: நடிகை ரோகிணி

நான் வேலைக்குச் செல்வதை ரகுவரன் விரும்பவில்லை: நடிகை ரோகிணி

2 mins read
f8af0dc4-cdfa-4a1e-8ce2-6c1c75022a3f
மறைந்த நடிகர் ரகுவரனுடன் நடிகை ரோகிணி. அவரது மகன் அச்சு அசலாக ரகுவரனைப் போலவே இருப்பதாகப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். - படம்: ஃபேஸ்புக்.காம்/புகழ்.விக்னேஸ்

திருமணத்திற்குப் பிறகு தமது திரையுலக வாழ்க்கைக்கு மறைந்த நடிகர் ரகுவரன் ஆதரவளிக்கவில்லை என்றும் தான் வேலைக்குச் செல்வதை அவர் விரும்பவில்லை என்றும் நடிகை ரோகிணி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

90களில் தமிழ், மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோகிணி.

சிறந்த நடிகை, பின்னணிக் குரல் கலைஞர், இயக்குநர் எனப் பன்முகத்திறமை கொண்ட இவர், கடந்த 1996ல் பிரபல வில்லன் நடிகர் ரகுவரனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.

பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக 2004ல் விவாகரத்து பெற்ற இந்தத் தம்பதியருக்கு ரிஷி என்ற மகன் உள்ளார்.

பிரிவுக்குப் பிறகும் ரகுவரன் மீதான நட்பையும் மரியாதையையும் ரோகிணி தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், அண்மைய நேர்காணல் ஒன்றில் தனது திருமண வாழ்க்கை குறித்தும், திரையுலகில் இருந்து தான் தற்காலிகமாக விலகியிருந்தது குறித்தும் ரோகிணி மனம் திறந்துள்ளார்.

“ரகுவரன் நான் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆதரவு தரவில்லை. நான் ஒரு குடும்பத் தலைவியாக மட்டுமே இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். நான் வேலைக்குச் செல்வதை அவர் விரும்பாத காரணத்தினால், திருமணத்திற்குப் பிறகு ஏறக்குறைய ஏழு ஆண்டுக் காலம் நான் திரையுலகை விட்டு முற்றிலும் விலகியிருக்க வேண்டியதாயிற்று.

“ரகுவரன் வளர்ந்த குடும்பச் சூழல் அப்படிப்பட்டது. அவர்கள் குடும்பத்தில் பெண்கள் வேலைக்குச் செல்லும் வழக்கம் இருந்ததில்லை. தன் மனைவி எப்போதும் தனது பாதுகாப்பிற்குள் மட்டுமே இருக்கவேண்டும் என்று அவர் எண்ணினார். அவரது அந்த மனநிலையிலிருந்து நான் வெளியே வர நீண்ட காலம் பிடித்தது.

“பல்வேறு போராட்டங்களையும் சவால்களையும் கடந்தே என்னால் மீண்டும் திரையுலகுக்குள் காலடி எடுத்து வைக்க முடிந்தது. அதன்பிறகே நடிகையாக மட்டுமன்றி, ஒரு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பையும் என்னால் பெற முடிந்தது,” என்று தெரிவித்துள்ளார்.

திருமண வாழ்க்கை குறித்து ரோகிணி பகிர்ந்துள்ள இந்த நெகிழ்ச்சியான, வெளிப்படையான கருத்துகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்