‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினியும் தனுஷும் இணைந்து நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் கண்டது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. முதல் பாகத்தில் கௌரவ வேடத்தில் தோன்றிய மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஆகிய இருவரும் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் தனுஷுக்கு ஏற்ற ஒரு கதாபாத்திரத்தை இயக்குநர் நெல்சன் உருவாக்கி இருப்பதாகவும் அதில் தனுஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கோடம்பாக்க வட்டாரங்களில் கூறப்படுகிறது.