ரஜினி, கமல் படத்தில் புது நாயகி

ரஜினி, கமல் படத்தில் புது நாயகி

2 mins read
2ccbbd85-46a9-4b2a-a089-feddc9ac5037
சாரா அர்ஜுன். - படம்: சாரா/ஃபேஸ்புக்
Google News Preferred Icon

ஏறத்தாழ 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கிறார்கள்.

ரெட் ஜெயன்ட் தயாரிக்க, நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்குவது தெரிந்த செய்திதான்.

இப்படத்தின் கதாநாயகி யார் என்பதை அறிவதில்தான் ரசிகர்களின் முழுக் கவனமும் ஆர்வமும் குவிந்துள்ளன.

கதாநாயகன் யார் என்பது இன்னும் சில நாள்களில் தெரியக்கூடும். அதன் பிறகு இருவரில் யாருடன் அந்த நாயகி ஜோடி சேர்வார் என்பதை எளிதில் தீர்மானிக்கவும் இயலும். எனினும், இப்போதே தெரிந்துகொள்வதுதானே ரசிகர்களுக்கு அழகு!

ரஜினியும் கமலும் இதுவரை 13 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதில் மூன்று படங்களில் ஒருவருக்கொருவர் நட்புக்காக கௌரவ வேடங்களில் நடித்தனர்.

இருவரும் இணைந்த படங்களில் பெரும்பாலும் ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, சுஜாதா, மாதவி ஆகியோர்தான் நாயகிகளாக நடித்திருந்தனர்.

ஸ்ரீதேவி ஒருவேளை உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர்தான் நாயகியாக நடிக்க வேண்டும் என்பது பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமாக இருந்திருக்கக்கூடும்.

எனினும், மூத்த நடிகர் ஒருவர் நிச்சயம் புதுப் படத்தில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை மாதவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றும் வாய்ப்பும் உள்ளது.

ஸ்ரீபிரியா இன்னமும் நடிப்பதற்குத் தயாராகவே உள்ளார். இப்படி பல ஆருடச் செய்திகளும் எதிர்பார்ப்புகளும் வலம்வரும் நிலையில், அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி, ‘யார் இப்படத்தின் கதாநாயகி’ என்பதுதான்.

இந்நிலையில், ‘துரந்தர்’ படப்புகழ் சாரா அர்ஜுனுக்குத்தான் அந்த அதிர்ஷ்டம் வாய்த்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கதைப்படி, ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இந்தப் படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் நெல்சன்.

சாரா மட்டுமல்லாமல், மேலும் சில இளம் நாயகிகளும் பரிசீலனையில் உள்ளதாகத் தகவல்.

விரைவில் ‘துரந்தர்’ படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாக உள்ளது. இதையடுத்து, சாராவை ஒப்பந்தம் செய்ய இந்தித் தயாரிப்பாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது.

நடிகர் ராஜ் அர்ஜுனின் மகளான சாரா, இந்தியில்தான் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு இந்தி, தமிழ், மலையாளப் படங்களில் நடித்திருந்தாலும் ‘கொட்டேஷன் கேங்’ படத்தில் போதைக்கு அடிமையான இளம் பெண்ணாக நடித்ததுதான் ரசிகர்களை இவர் பக்கம் திரும்ப வைத்தது.

அதன் பிறகு, இந்தியத் திரையுலகில் சாராதான் ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஜொலிக்கிறார்.

தற்போது சமூக ஊடகங்களில் இவரைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருகிறது.

இப்படிப்பட்டவரைத்தான் ரஜினி, கமல் இணையும் படத்தில் நடிக்க வைப்பதற்கான முயற்சியை ஒருதரப்பினர் மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்ப் படங்கள் மீது தனிப்பற்று கொண்டுள்ள சாராவும் இந்த வாய்ப்பை ஏற்க மனத்தளவில் தயாராகிவிட்டாராம்.

கதைப்படி, ஓர் இளம் பெண்ணுக்காக ரஜினியும் கமலும் மோதுகிறார்கள். அந்த இளம் பெண் மகளா அல்லது காதலியா என்பது தெரியாவிட்டாலும், அண்மைய தகவலின்படி சாராதான் அந்த இளம் பெண் என்பது மட்டும் 90 விழுக்காடு உறுதி என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
ரஜினிகமல்நடிகைதிரைப்படம்இயக்குநர்