லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம் நான்கு நாள்களில் 404 கோடியை வசூலித்து உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் விமர்சன ரீதியில் பலதரப்பட்ட கருத்துகளைப் பெற்று வருகிறது.
அப்படத்தில் 38 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த், சத்யராஜ் இருவரும் இணைந்து நடித்திருந்த நிலையில், நாகர்ஜூனா வில்லன் வேடத்தில் நடித்தார்.
மற்றொரு வில்லனாக மலையாள நடிகர் சௌபின் ஷாகிர் மிரட்டிய நிலையில், அமீர்கான், கன்னட நடிகர் உபேந்திரா ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்திருந்தனர்.
அடுத்ததாக ‘கைதி 2’ படத்தை லோகேஷ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஜினி, கமல் இருவரையும் இணைத்துப் படம் ஒன்றை அவர் இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், அப்படம் குறித்த பேச்சுவார்த்தை ‘கூலி’ வெளியீட்டிற்கு முன்பே முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ரஜினி, கமல் இருவரும் சந்தித்து பேசி இணைந்து நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் அப்படத்தைத் தயாரிக்கும் என்றும் அப்படத்தை எடுத்து முடிக்க லோகேஷ் எவ்வளவு காலம் எடுத்துக்கொள்வார் என்பது குறித்த விவரங்களும் விரைவில் வெளியாகும் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இது ஒருபுறம் இருக்க, ‘ரெட் ஜெயன்ட்’ நிறுவனமும் அப்படத்தின் தயாரிப்பில் இணையும் எனச் சொல்லப்படுகிறது.
அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உதயநிதியின் மகன் இன்பநிதி விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
‘ரெட் ஜெயன்ட்’ உடன் இன்பநிதி இணையும் நாளில் ரஜினி, கமல் இருவரும் இணையும் படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
எது எப்படியிருந்தாலும், ரஜினி, கமல் ரசிகர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் தகவல்தான்.
‘தக் லைஃப்’ படத்தின் தோல்வியால் துவண்டு போன கமல் ரசிகர்களை இச்செய்தி மீண்டும் துள்ளி குதிக்க வைத்துள்ளது.
அவர்கள் மீண்டும் எப்போது சேர்ந்து நடிப்பார்கள் என்ற ஆவலில் காத்துகிடந்த ரசிகர்களுக்கு, ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில், நல்ல கதை இருந்தால் தானும் கமலும் சேர்ந்து நடிப்பதற்கு தயார் என்று ரஜினி அறிவித்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
கே.பாலசந்தரின் அறிமுகங்களான இருவரும் சேர்ந்து நடித்த 13 திரைப்படங்களில் ஏழு திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படங்களாகும்.
ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் என்று தனித்தனி ரசிகர் கூட்டம் அதிகரித்ததால், இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து அவரவர் பாதைகளில் பயணம் செய்ய தொடங்கி விட்டார்கள். 1979ஆம் ஆண்டு வெளியான அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில்தான் அவர்கள் கடைசியாகச் சேர்ந்து நடித்தனர்.
இதற்கிடையே, கமல் அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்திலும் ரஜினி நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும் நடிக்கின்றனர்.