தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஜினி, சூர்யா ரசிகர்கள் பாலிவுட் நாயகர்களை ஏற்பதில்லை: சல்மான் கான்

2 mins read
bd9da3e2-1a32-48c0-bf69-c23196f66aae
நடிகர் சல்மான் கான். - படம்: ஊடகம்

ரஜினி, சூர்யா ரசிகர்கள் எங்களை ஏற்றுக்கொள்வதில்லை என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள பாலிவுட் திரைப்படம் ‘சிக்கந்தர்’. இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார்.

இப்படம் மார்ச் 30ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், ‘சிக்கந்தர்’ படக்குழுவினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தென்னிந்திய திரைத்துறை பற்றி சல்மான் கான் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “தென்னிந்தியாவில் எனக்கு மிக வலுவான ரசிகர் கூட்டம் உள்ளது. ஆனால், எனது படங்கள் அங்கு வெளியாகும்போது அவை ‘பாக்ஸ் ஆபிஸ்’ வெற்றியாக மாறாது.

“ரஜினிகாந்த், சிரஞ்சீவி, சூர்யா, ராம் சரண் போன்ற பல தென்னிந்திய நடிகர்களுக்கு பாலிவுட்டில் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கின்றது. நாங்களும் அவர்களின் படங்களைப் பார்க்கின்றோம். நன்றாக ஓடுகின்றன.

“ஆனால், அதேபோல எங்களுக்கு நடப்பதில்லை.

“குறிப்பாக நான் நடித்த படங்கள் அங்கு வெளியாகும்போது அவர்களின் ரசிகர்கள் சென்று பார்ப்பதில்லை. என்னைப் பார்க்கும்போது ரசிகர்கள் பாய், பாய் என்கிறார்கள்.

“தென்னிந்திய சினிமா தனித்துவமானது. அதில், கலாசாரத்துடனான இணைப்பு இருக்கும். அதனால்தான் ‘பான் இந்தியா’ படங்கள் தொடர்ந்து வெளியாகும் போக்கு இருந்தாலும் இந்தித் திரைப்படங்கள் அங்கு பெரிய அளவில் வெற்றிபெற முடியவில்லை” என்று பேசினார்.

“நாங்கள் இங்கு ஏற்றுக்கொள்வதைப் போல, எங்களை அங்கு ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைத் திரையரங்குகளை நோக்கி இழுப்பது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. 

“எனது வாழ்வில் தென்னிந்திய தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து நான் பணியாற்றியுள்ளேன்,” என்று சல்மான் கான் தமது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்