ரஜினியின் அடுத்த படத்தில் இருந்த சுந்தர்.சி விலகியது ஏன் என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், சுந்தர்.சி கூறிய கதையில் பல மாற்றங்களை ரஜினியும் கமலும் அடுத்தடுத்து சொன்னதாகவும் அந்த மாற்றங்கள் அனைத்தையும் சுந்தர்.சி செய்ததாகவும் கூறப்படுகிறது.
“ஆனால், இறுதியாக முழுக் கதையையும் மீண்டும் கேட்ட ரஜினி, அது தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறியதால் சுந்தர்.சி கோபமும் வருத்தமும் அடைந்தார்.
“அதனால் இருவரிடமும் நேரடியாகத் தகவல் தெரிவிக்காமல் தன் மனைவி குஷ்பு மூலம் ஓர் அறிக்கை வெளியிட்டு அப்படத்தில் இருந்து தாம் விலகுவதாக அவர் அறிவித்தார்.
“இதுகுறித்து டெல்லியில் இருந்து கமலுக்கு விவரம் தெரியவர, குஷ்புவைத் தொடர்புகொண்டு அந்த அறிவிப்பை உடனே சமூக ஊடகத்தில் இருந்து நீக்குமாறு கூறியுள்ளார்.
சுந்தர்.சி பணத்துக்காக ஒரு படத்தை இயக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், தற்போது மிகப்பெரிய பொருள் செலவில் ‘மூக்குத்தி அம்மன்-2’ படத்தை இயக்கி வருகிறார்.
அடுத்து, விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.
“முன்பெல்லாம் அனைவரிடமும் நட்பாகப் பேசிப் பழகிய சுந்தர்.சி, அண்மைக் காலமாக மிகவும் மாறிவிட்டார். சற்று கோபமாக நடந்து கொள்கிறார். அதன் காரணமாகவே கோபப்பட்டு ரஜினி பட வாய்ப்பைக் கைவிட்டுள்ளார்,” என்று வலைப்பேச்சு நிகழ்ச்சியில் மூத்த செய்தியாளர்கள் அந்தணன், பிஸ்மி ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர்.

