நடிப்பைப் பாராட்டிய ரஜினி; படத்தைப் புகழ்ந்த கமல்: சிவகார்த்திகேயன்

2 mins read
2a5831d1-9277-4890-8430-f309eb73cdea
‘பராசக்தி’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்துகொண்ட அப்படக்குழுவினர். - படம்: ஆனந்த விகடன்

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சுதா கொங்கரா இயக்கியிருக்கும் அப்படத்தில் ரவி மோகன் வில்லனாகவும் ஸ்ரீலீலா நாயகியாகவும் நடித்திருந்தார். ஸ்ரீலீலாவுக்குத் தமிழ் அறிமுக திரைப்படம் இதுதான்.

இவர்களைத் தாண்டி அதர்வா, சேத்தன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் அப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இசையமைத்த 100வது படம் இது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் ஜனவரி 13ஆம் தேதி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், “அந்தப் படத்துக்காக நான் நிறைய பேருக்கு நன்றி சொல்வதற்குக் கடமைப்பட்டுள்ளேன். இயக்குநர் சுதா அந்தப் படத்தின் கதையை என்னிடம் கூறியபோது மிகவும் சுவாரசியமாக இருந்தது.

ஒரு நடிகனாகப் பார்க்கும்போது அந்தப் படத்தில் என்னுடைய நடிப்புத் திறனை வெளிப்படுத்த நிறைய இடங்கள் எனக்குக் கிடைத்தன,” என்றார்.

என்னை மெருகேற்றிக்கொள்ள அந்தக் கதையில் நிறைய விஷயங்கள் இருந்தன எனக் கூறிய சிவா, இந்தக் கதையைத் திரைப்படமாக மாற்றுவது மிகவும் சிரமம் எனத் தெரிவித்தார்.

“உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் எடுக்க வேண்டும். அதேநேரம் அப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி அடைய வேண்டும். அதற்குத் தேவையானவற்றையும் படத்தில் சேர்க்க வேண்டும்,” என அவர் நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டார்.

படத்தைப் பார்த்துவிட்டு ராதிகா வாழ்த்தியதாகச் சொன்ன சிவா, பட வெளியீட்டிற்கு முந்தைய நாள் தன்னைத் தொலைபேசியில் அழைத்த கமல்ஹாசன் படத்தைப் பற்றி ஐந்து நிமிடங்கள் பேசியதாகக் கூறினார்.

மேலும், படத்தைப் பார்த்துவிட்டுபின் தன்னை ரஜினி அழைத்து அற்புதமான நடிப்பு எனக் கூறியதாகவும் சிவா சொன்னார்.

குறிப்புச் சொற்கள்