ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது ‘வேட்டையன்’ திரைப்படம்.
இப்படத்தின் முதல் நாள் வசூல் நூறு கோடி ரூபாயை எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இயக்குநர் ஞானவேல் பட அனுபவங்களை ஒரு பேட்டியில் விரிவாகப் பகிர்ந்துள்ளார். அவர் பேட்டியில் கூறியதைப் பார்ப்போம்.
“ரஜினி மிகப்பெரிய நட்சத்திர நடிகர் என்பதைக் கடந்து, சிறந்த நடிகர் என்றுதான் நினைப்பேன். ‘முள்ளும் மலரும்’ அப்படிப்பட்ட படம்தான். அதேபோல் ‘தில்லுமுல்லு’ படத்தையும் அவரது சிறந்த நடிப்புக்கான ஒரு படைப்பு எனக் கூறலாம்.
“தன்னை மிகச்சிறந்த நடிகர் என்று கூறினால் அவர் ஒப்புக்கொள்ள மாட்டார். உடனே, ‘அப்படியெல்லாம் இல்லை’ என மறுப்பார். ஆனால், ‘வேட்டையன்’ படத்தில் அவரது ஆகச்சிறந்த நடிப்பின் பரிமாணங்களைப் பார்க்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
“ரஜினிக்காக என்னை மொத்தமாக மாற்றிக்கொள்கிறேன் என்றால் அது சரியாக வராது. அதே மாதிரி அவரை மொத்தமாக மாற்ற வேண்டும் என்று நானும் நினைக்கக் கூடாது. ரஜினி என்பது அவரது இயல்பு, ஸ்டைல், அவரிடம் மக்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் ஆகிய எல்லாம் சேர்ந்ததுதான்.
“‘ஜெயிலர்’ படத்துக்கு கிடைத்த வரவேற்புக்குப் பின் ரஜினியிடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு கதைகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்.
“அவரிடம் கதை சொன்ன இரண்டு நாள்கள் கழித்து, முழுக்கதையை என்னிடம் திரும்பச் சொன்னார். இரண்டரை மணி நேரம் சொன்ன கதையை ஒரு மணி நேரமாக சுருக்கிச் சொன்னார். ‘நீங்க சொன்னதை சரியாக உள்வாங்கிக் கொண்டேனா’ எனக் கேட்டார்.
“இதையொட்டி உரையாடல்கள் எங்களுக்குள்ளே நடந்துகொண்டே இருக்கும். இதில்தான் அவர் தன்னை அருமையாக மெருகேற்றிக்கொள்கிறார். படத்தில் என்னவாக வரப்போகிறோம் என்பதை சரியாகப் புரிந்துகொள்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தப் படத்தில் அவர் காவல்துறை கண்காணிப்பாளராக, என்கவுன்டர் செய்யும் அதிகாரியாக நடித்துள்ளார். குற்றவாளிகளைச் சுட்டுக்கொல்வது குறித்து அவருடைய பார்வை என்ன, அவர் ஏன் அந்தப் பார்வையில் இருக்கிறார் என்பது குறித்து கதை விவரிக்கும்.
“குற்றவாளிகளைச் சுட்டுக்கொல்லும்போது சில பிரச்சினைகள் எழும். ஓர் உயிரைப் பறிப்பது எத்தகைய அனுபவம், அதைச் செய்பவரின் மனநிலை என்ன என்பது குறித்தும் தீர்க்கமான உரையாடல் இடம்பெற்றுள்ளது.
“இந்தி நடிகர் அமிதாப் பச்சன், சத்யதேவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் நடித்தால் இந்திய அளவில் பட வியாபாரம் நடக்கும் என்பதற்காக அவரை அணுகவில்லை. இவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கதை எழுதும்போதே முடிவு செய்வோம் அல்லவா? அவ்வாறு மனதில் தோன்றியவர்தான் அமிதாப். அவரைத் தவிர வேறு யாரையும் நான் யோசிக்கவே இல்லை.
“இத்தனைக்கும் அவர் நடித்த படங்களை நான் அதிகம் பார்த்ததில்லை. அவரைப் பற்றி பலவற்றைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ரஜினி, அமிதாப் இருவரும் நீண்ட காலமாக இணைந்து நடிக்கவில்லை.
“அமிதாப் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்று ரஜினி கேட்டார். முதலில் நீங்கள் சம்மதியுங்கள். கதை பிடித்திருந்தால் அவரும் இணைவார் என்றேன்.
“நான் எதிர்பார்த்தபடியே, அமிதாப்புக்கு கதை பிடித்துப்போனது. அவரும் இந்தப் படத்துக்குள் வந்துவிட்டார். ரஜினியுடன் இணைந்து நடிப்பதும் அவர் ஒப்புக்கொண்டதற்கு காரணமாக இருக்கும் என இப்போது தோன்றுகிறது.
“அதேபோல் ஃபகத் ஃபாசில் அருமையான நடிப்பை வழங்கியுள்ளார். மற்ற நடிகர்களைவிட குறைவான படங்களை ஒப்புக்கொண்டாலும், நடிப்பில் குறைவைப்பதில்லை. பிடித்த கதைகளில் மட்டுமே நடிக்கிறார் என்பதை அவருடன் இணைந்து பணியாற்றியபோது புரிந்துகொள்ள முடிந்தது,” என்று இயக்குநர் ஞானவேல் தனது பேட்டியில் விவரித்துள்ளார்.