ரஜினியும் கமல்ஹாசனும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்காத தமிழ்த்திரை ரசிகர்களே இருக்க முடியாது.
அவ்வளவு ஏன், சம்பந்தப்பட்ட இருவருமேகூட இதுகுறித்து பலமுறை பேசியுள்ளனர்.
“நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் நடக்க வேண்டுமே,” என்று கமல் முன்பு ஒருமுறை கூறியிருந்தார்.
இந்நிலையில், இருவரையும் நடிக்க வைக்க தாம் மேற்கொண்ட முயற்சி கிட்டத்தட்ட கைகூடி வந்ததாகவும் கொரோனா தொற்றுப்பரவலால் அது வெற்றி பெறவில்லை என்றும் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
“அந்தப் படத்தை கமல் தயாரிக்க, ரஜினி நடிப்பதாக இருந்தது. அடுத்து இருவரையும் குண்டர் கும்பல்களின் வயதான தலைவர்களாக சித்திரித்து ஒரு கதையை தயார் செய்தேன்.
“வணிகம் உள்ளிட்ட சிக்கல்களால் அதைப் படமாக்க முடியவில்லை. அது சாத்தியமானால் அந்தப் படம் பல சாதனைகளைப் படைக்கும்,” என்று கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

