பாட்ஷா படத்தை தயாரித்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நினைவு தினம் புதன்கிழமை (ஏப்ரல் 9) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நடிகர் ரஜினிகாந்த், ஆர்.எம்.வீரப்பன் குறித்து பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.
ஆர்.எம். வீரப்பனின் நினைவு தினத்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக ரஜினி கூறினார்.
தன்னிடம் நெருக்கம், அன்பு, மரியாதை காட்டியவர்களில் கே. பாலசந்தர், சோ, பஞ்சு அருணாச்சலம், ஆர்.எம்.வீரப்பன் ஆகியோர் அடங்குவர் என்றார் அவர்.
இந்த நால்வரும் தற்போது உயிருடன் இல்லை என்று அவர்களுடன் பழகிய நாள்களைப் பற்றி எண்ணி ஏங்குவதுண்டு என்றும் ரஜினி பகிர்ந்துகொண்டார்.
“பாட்ஷா திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் வெடிகுண்டு கலாசாரத்தைப் பற்றி பேசினேன். அமைச்சர் மேடையில் இருக்கும்போது பேசியிருக்கக்கூடாது. அப்போது எனக்குத் தெளிவு இல்லை. யோசிக்காமல் பேசிவிட்டேன். அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பனைப் புரட்சித்தலைவி ஜெயலலிதா அப்போது பதவியில் இருந்து நீக்கினார்.
“அரசுக்கு எதிராக ரஜினி பேசியபோது நீங்கள் எப்படி பேசாமல் இருந்தீர்கள் என்ற ஆர்.எம். வீரப்பனிடம் ஜெயலலிதா கோபித்துக்கொண்டார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆர்.எம். வீரப்பனின் பதவி பறிபோனதற்கு நான்தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி என்னை இரவு முழுவதும் தூங்கவிடவில்லை. ஆர்.எம். வீரப்பனுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றேன். ஆனால் அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. மறுநாள் காலையில் நேரில் சென்று மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவர் எதுவுமே நடக்காதது போல, “அதெல்லாம் விடுங்க. அதைப்பற்றி கவலைப்படாதீங்க.. மனசுல வெச்சுக்காதீங்க. நீங்க விடுங்க. சந்தோஷமா இருங்க. உங்கள் படப்பிடிப்பு எங்கு நடைபெறுகிறது என்று சாதாரணமாகக் கேட்டார்.
“எனக்கு அந்தக் குற்ற உணர்வு எப்போதும் போகாது. மதிப்பிற்குரிய ஜெயலலிதாவுக்கு எதிராக பேசுவதற்குச் சில காரணங்கள் இருந்தாலும்கூட இந்த காரணம் முக்கியமானது என்றார் ரஜினி.