ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ‘கூலி’ படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அண்மையில் இந்தப் படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் விவரங்களை படக்குழு அறிவித்தது.
லோகேஷ் மற்றும் ரஜினிகாந்த் இணைவதால், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே அதிகரித்து காணப்படுகிறது.
ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் நாகார்ஜுனாவை வைத்து படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன.
மிகுந்த கவனத்துடன் கைப்பேசிகளை வாங்கி வைத்த பின்பே படப்பிடிப்புப் பகுதிக்கு துணை நடிகர்கள் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.
ஆனால் யாரோ ஒருவர் கைப்பேசியில் காட்சியைப் படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதனை பலரும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தனது கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “ஒற்றைப் பதிவு காரணமாக பலரது இரண்டு மாத கால கடின உழைப்பு வீணாகி விடுகிறது. இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவை ஒட்டுமொத்த அனுபவத்தையும் பாதித்து விடும். நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியின் 171வது திரைப்படமாக தயாராகி வரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாகிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
தங்கத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு டீசர் வெளியிடப்பட்டது. இதனால், இப்படம் தங்கக் கடத்தல் பின்னணியில் விறுவிறுப்பான திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.