ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், வசூலிலும் பல கோடிகளைக் குவித்தது.
ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
தற்பொழுது படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது.
அடுத்ததாக, கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைத்தொடரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 35 நாள்கள் இங்கு படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது..
இந்நிலையில், படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்புத் தளத்தில் தாம் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘படையப்பா திரைப்படம் வெளியாகி 26 வருடங்கள் நிறைவு, ஜெயிலர்-2 படப்பிடிப்பின் முதல் நாள்,’ என பழைய நினைவுகளை நினைவுகூரும் வகையில் அப்பதிவை பதிவிட்டுள்ளார்.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ படம் 1999 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதில் ‘நீலம்பரி’ என்ற வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்புடைய செய்திகள்
அந்தப் படத்திற்குப் பிறகு, 26 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜெயிலர் படம் மூலமாக ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன்.
ஜெயிலர் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே ஜெயிலர்-2 படத்தையும் தயாரிக்கிறது.