இது கடந்த காலங்களில் வெற்றிபெற்ற திரைப்படங்களை மறுவெளியீடு செய்யும் காலம் போலிருக்கிறது.
அந்த வகையில், 34 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை ஆகஸ்ட் 22ஆம் தேதி மீண்டும் வெளியிட உள்ளனர். ஆர்.கே.செல்வமணி இயக்கிய இப்படம், தற்போது மின்னிலக்கப் பதிப்பாக புதுப்பொலிவுடன் வெளியாகிறது.
இப்படத்தில் இடம்பெற்ற, இளையராஜாவின் இசையில் உருவான, ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலையும் அதற்கு ரம்யா கிருஷ்ணனின் நடன அசைவுகளையும் ரசிகர்கள் எந்தக் காலத்திலும் ரசிப்பார்கள்.
இப்படத்தின் மறுவெளியீட்டையொட்டி, சென்னையில் நடைபெற்ற படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
தாம் முதலில் தமிழில்தான் அறிமுகமானதாகவும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றதாகவும் அவர் கூறினார்.
தமிழில் ஒரு தோல்விப் படத்தில் நடித்த பிறகு, தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் ‘கேப்டன் பிரபாகரன்’ பட வாய்ப்பு தேடிவந்தது.
‘இதில் நீங்கள் நாயகி அல்ல. இரண்டாம் நாயகி போன்ற வேடம்தான்’ என்றார் இயக்குநர் செல்வமணி. ‘பரவாயில்லை’ எனக் கூறி சம்மதித்தேன். ஆனால், இந்தப் படம் தந்த வெற்றியும் புகழும் மிக அதிகம். அதன் பிறகு இதே போன்ற வெற்றிக்காக பத்து ஆண்டுகள் காத்துக்கிடந்தேன். அதன் பின்னரே ‘படையப்பா’ படம் வெளியாகி, என் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது.
“இப்போதும்கூட நான் ஏதாவது நிகழ்ச்சிக்குச் சென்றால், இந்தப் பாடல் கட்டாயம் ஒலிக்கும். அந்த அளவுக்கு ரசிகர்களுக்குப் பிடித்தமான, காலத்தால் அழியாத பாடல் இது,” என்றார் ரம்யா கிருஷ்ணன்.
தொடர்புடைய செய்திகள்
விழாவில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசும்போது, தந்தையுடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது உணர்வுகளைக் கட்டுப்படுத்த இயலாமல் கண்ணீர் விட்டு அழுதபோது, மேடையிலும் கூடியிருந்தோர் மத்தியிலும் கனத்த சோகம் நிலவியது.
“இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் விஜய பிரபாகரன் பிறந்தார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு அவரே இந்தப் படம் தொடர்பான விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். இந்த விழாவின் சிறப்பம்சமும் இதுதான்,” என்றார் இயக்குநர் செல்வமணி.
கேப்டன் பிரபாகரன் படத்தின் மறு வெளியீட்டைக் கொண்டாட காலஞ்சென்ற விஜயகாந்தின் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். புதுப்பட வெளியீடு போன்று இந்தக் கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக இருக்குமாம்.