அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, தங்கலான் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பா. ரஞ்சித் அடுத்ததாக வேட்டுவம் படத்தை இயக்கி வருகிறார்.
அதில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ், கலையரசன், சோபிதா துலிபாலா உள்ளிட்டோர் நடிக்கின்றர். மணிகண்டன் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
அண்மையில் வேட்டுவம் படத்தில் கதைக்களம் என்ன என்பது குறித்த விளக்கத்துடன் ‘வோர்ல்ட் ஆஃப் வேட்டுவம்’ காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தில் ஒரு பதவிக்கான போட்டி நடக்கிறது என்றும் அதில் வெல்லப்போவது யார் என்பதாகக் கதை இருக்கும் என ரஞ்சித் காணொளியில் பேசுகிறார். படம் வரலாற்று பின்னணியையும் நிகழ்காலத்தையும் கலந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சென்னையில் நடந்த அந்தக் காணொளி வெளியீட்டு நிகழ்ச்சியில் ஆர்யா கலந்துகொண்டு பேசினார்.
“சார்பட்டா-2 எப்போது எடுக்கலாம் என ரஞ்சித்திடம் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் சின்னதாக வேட்டுவம் படத்தை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்னார்.
“ஆனால், அதன் பின்னர் என்னையும் அதில் நடிக்க வைத்தார். சிறு பட்ஜெட்டில் தொடங்கிய இந்தப் படம் இன்று பிரம்மாண்ட பட்ஜெட்டில் வந்து நிற்கிறது,” என்று ஆர்யா சொன்னார்.
சமூக அக்கறையுடன் ஒவ்வொரு படத்திலும் ஆதிக்க சக்திக்கு எதிரான குரலைத் தொடர்ந்து எழுப்பி வரும் இயக்குநர் ரஞ்சித் இந்தியாவிலேயே சிறந்த இயக்குநர் என ஆர்யா குறிப்பிட்டார்.
“தங்கலான் படம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த படம். ஆனால், வேட்டுவம் படப்பிடிப்பின்போது, ‘தங்கலான் படம் சரியாக மக்களுக்குச் சென்று சேரவில்லை. அதை நான்தான் சரியாகச் சென்று சேர்க்கவில்லை. ஆனால், அந்த தப்பை வேட்டுவம் படத்தில் செய்துவிடக்கூடாது’ என ரஞ்சித் பேசியதும், எந்தவொரு ஈகோவும் இல்லாத மனிதராக இருக்கிறாரே என்று பார்த்து வியந்தேன்,” என்றார் ஆர்யா.
“தொடக்கத்தில் வேட்டுவம் படத்தில் நான் இல்லவே இல்லை. அட்டகத்தி தினேஷை வைத்துத்தான் படத்தைத் தொடங்கினார். வெறும் 25 கோடி ருபாயில் எடுப்பதாகத் திட்டமிடப்ட்ட இந்தப் படம் இன்று 75 கோடி ரூபாய் பட்ஜெட் எனப் பெரிய படமாக மாறியுள்ளது. ரஞ்சித்தின் எண்ணத்திற்கு தயாரிப்பாளர் மிகவும் உறுதுணையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கண்டிப்பாக வேட்டுவம் படம் வெளியானால் இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும்,” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
