‘வேடன்’... இப்போதைக்கு மலையாள ஊடகங்களின் பேசுபொருள்.
குறுகிய காலத்தில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார் கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகர் வேடன்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர்தான் வேடன் என்ற ஹிரந்தாஸ் முரளி.
மற்ற இளம் பாடகர்களைப் போலவே இவரும் தாமே ராப் பாடல்களை எழுதிப் பாடி, தனியிசைத் தொகுப்புகளாக யூடியூபில் பதிவிட்டுக் கொண்டிருந்தார்.
கேரளாவில் வளர்ந்த இவருக்கு, சிறு வயது முதலே பாடல், இசை மீது ஆர்வம் இருந்ததாம். அதனால், தொடர்ந்து கவிதை எழுதுவது, தமிழ்ப் பாடல்களை மலையாளத்தில் எழுதிப் பாடுவது எனத் தன் கலைப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்.
இயற்பெயர் ஹிரந்தாஸ் என்றாலும், சிறு வயதில் ஆற்றில் மீன்பிடிக்கச் செல்லும்போது மீன் அம்புகளைச் சரியாகக் குறிபார்த்து எறிவாராம். அப்போது நண்பர்கள் விளையாட்டாக சூட்டிய பெயர்தான் வேடன். இந்தப் பெயர்தான் இப்போது பரவலாகப் குறிப்பிடப்படுகிறது.
பொருளியல் சூழல் காரணமாக கட்டுமானத்துறையில் கூலி வேலை செய்தபடியே மாலை வேளையில் பாடிக்கொண்டிருந்த வேடனுக்கு, திரைப்படத் தொகுப்பாளர் பி.அஜித்தின் அலுவலகத்தில் உதவியாளர் வேலை கிடைக்க, அங்குதான் டூபக் ஷகுர், எமினெம், அறிவு போன்ற ராப் பாடகர்களின் பாடல்கள் இவருக்கு அறிமுகமாயின.
அந்தப் பாடல்களில் உள்ள வலியும் உணர்ச்சியும் தம்மை, தாம் சார்ந்த வரலாறு நோக்கியும் போர் பாதிப்பு உள்ளிட்ட அடக்குமுறைகள் குறித்து அறிந்துகொள்ளவும் வழிசெய்ததாகச் சொல்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
சாதி, வர்க்க, மத அடக்குமுறைகளுக்கு எதிராக ‘வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்’ என்ற தலைப்பில் ஜூன் 2020இல் இவர் வெளியிட்ட முதல் தனியிசைப் பாடலுக்குப் பிறகு வேடன் அனைவருக்கும் அறிமுகமான பாடகராகிவிட்டார்.
அவரது புரட்சிக் கருத்துகள், வசீகரக் குரல் ஆகியவை அடக்குமுறைக்கு எதிரான பாடல்களை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்த்தன.
பாலஸ்தீனம் முதல் அமெரிக்காவில் தாக்கப்பட்ட கறுப்பின பெண் வரை சமூக அடக்குமுறைக்கு எதிராக உறுதியுடன் தெளிவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினார் வேடன்.
பாலியல் தொல்லை, போதைப்பொருள் வைத்திருந்தது என சில வழக்குகளில் சிக்கினாலும், அவருக்கான மவுசு குறையவில்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

