தமிழில் இன்னும் பெரிய வெற்றி கிடைக்காவிட்டாலும், தெலுங்கில் ராஷ்மிகா மந்தனாவின் கொடிதான் உயரப்பறக்கிறது.
பிறருடன் தன்னை ஒப்பிடுவதில் அறவே விருப்பமில்லை என்று குறிப்பிடும் ராஷ்மிகா, இதை வெளிப்படுத்தும் விதமாகத்தான் தன் உடலில் ‘irreplacable’ எனச் பச்சைக்குத்தி உள்ளாராம்.
“நான் நானாக இருப்பதைத்தான் விரும்புகிறேன். அப்படி இருப்பதால்தான் ரசிகர்கள் எனக்கு சிறப்பான இடத்தை அளித்திருப்பதாக நம்புகிறேன்,” என்கிறார் ராஷ்மிகா.
ஆணாதிக்கம் நிறைந்த திரையுலகில் இப்போது நிலைமை மாறிவிட்டதாகவும் சொல்கிறார்.
“முன்பெல்லாம் ஆணாதிக்கம் அதிக அளவில் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இப்போது திறமை இருந்தால் மட்டும் போதும், ரசிகர்களின் அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.
“வயது, தோற்றம், ஆண், பெண் என்பதெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. திறமைக்குத்தான் முதலிடம் என்பதில் ரசிகர்கள் தெளிவாக உள்ளனர்,” என்று சொல்லும் ராஷ்மிகாவுக்கு, தெலுங்கில் அவரது விருப்பத்துக்கு ஏற்ப தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றனவாம்.
எனினும் இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் கவனம் செலுத்துவதால் தெலுங்கில் அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடிக்க முடியாமல் போகிறதாம்.
“தெலுங்கு ரசிகர்கள் இது குறித்து சமூக ஊடகங்களில் வருத்தப்பட்டு பதிவிடுவதைக் கவனித்து வருகிறேன். சிலர் என்னைத் திட்டக்கூட செய்கிறார்கள். ஆனால் என் மீதான அன்புதான் இதற்குக் காரணம் என்பதை உணர்ந்துள்ளேன்,” என்கிறார் ராஷ்மிகா.
இன்றைய தேதியில் தென்னிந்திய அளவில், அதிக ஊதியம் பெரும் கதாநாயகிகளின் பட்டியலில் நயன்தாரா முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் ராஷ்மிகாதான் முதலிடத்தில் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களில் ஏன் நடிப்பதில்லை?
“அப்படிச் சொல்வதற்கில்லை. அத்தகைய படங்களில் நடிக்க எல்லா நடிகைக்குமே விருப்பம் இருக்கும். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. பல ஆண்டுகளுக்குப் பிறகு திரையுலகில் இப்போதுதான் சில மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
“தற்போது பெண்களையும் நாயகியையும் முன்னிலைப்படுத்தும் படங்கள் அதிக எண்ணிக்கையில் வெளி வருவதாக நான் நினைக்கவில்லை. எனினும் எதிர்காலத்தில் நிலைமை நிச்சயம் மாறும்.
“கதைக்கும் கதாநாயகி நடிப்புக்கும் முக்கியத்துவம் தரும் படங்கள் கண்டிப்பாக வெளிவரும். அந்தச் சமயத்தில் ஒரு படத்தின் கதை நாயகன் அல்லது கதை நாயகி யார் என்பதை மட்டும் கவனித்து ரசிகர்கள் திரையரங்குக்கு வரக்கூடும்.
“அத்தகைய மாற்றம் ஏற்படும்போது, தரமான படைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், நடிகர், நடிகைகள் இடையேயான ஊதிய முரண்பாடு என்பது முற்றிலும் களையப்படும்.
“எனக்குத் தெரிந்து இந்த மாற்றம் ஏற்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை,” என்கிறார் ராஷ்மிகா மந்தனா.