படப்பிடிப்பில் ரா‌ஷ்மிகாவுக்குப் பலத்த காயம்

படப்பிடிப்பில் ரா‌ஷ்மிகாவுக்குப் பலத்த காயம்

2 mins read
7e05a31c-b6f2-4844-8a1d-837af465b85b
‘த கெர்ல்ஃபிரண்ட்’ படத்தில் ரா‌ஷ்மிகா. - காணொளிப் படம்: கீதா ஆர்ட்ஸ் / யூடியூப்

இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘மைசா’.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதிரடி திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. அண்மையில், கேரள மாநிலம் அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் இந்த படத்திற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, முக்கியப் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுவந்தது. நடனமாடிக் கொண்டிருந்தபோது, ராஷ்மிகா எதிர்பாரா விதமாக தடுமாறி கீழே விழுந்தார்.

விழுந்ததில் அவருக்கு தொடை, இடுப்புப் பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர மருத்துவப் பரிசோதனை அளிக்கப்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முழுமையாகக் குணமடைய குறைந்தது ஆறு வாரங்கள் கட்டாய ஓய்வு எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்திற்காக சில சண்டைக் காட்சிகள், நீருக்கடியிலான காட்சிகளின் படப்பிடிப்பை ரா‌ஷ்மிகா அண்மையில் முடித்திருந்தார். அதைத் தொடர்ந்து பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

கன்னட நடிகையாக ரா‌ஷ்மிகா, கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு மாநிலப் படங்களில் ரசிகர்களை ஈர்க்கும் அளவுக்குப் பிரபலமடைந்துவிட்டார். இவர் ஹிந்தியில் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்த ‘எனிமல்’ படமும் பெரும் வெற்றிகண்டது.

முன்னணித் தெலுங்கு நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டாவை மணமுடித்துக்கொண்டார். இருவரும் இணைந்து நடித்த ‘கீதா கோவிந்தம்’ போன்ற படங்கள் வெற்றிப் படங்களாகும்.

தமிழிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அது, 2023ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படமாகும்.

ராகுல் ரவிந்திரன் இயக்கத்தில் ரா‌ஷ்மிகா நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான ‘த கெர்ல்ஃபிரண்ட்’ தெலுங்குப் படம் ரசிகர்கள், விமர்சகர்கள் ஆகிய இருதரப்பினரிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்கிறார், தனது நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களைக் கவர்ந்துவரும் ரா‌ஷ்மிகா.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாதிரைப்படம்காயம்